தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா.. தேனியில் தாய்க்காக கோயில் கட்டிய மகன்!
தேனி அருகே மறைந்த தனது தாயாருக்காக கோயில் கட்டி மருத்துவ நலத்திட்ட
உதவிகளை செய்து வரும் மகனின் செயல் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகந்த்.
இவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் ஜெயமீனா கடந்த பத்து
வருடங்களுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன் மகன் ஜெகந்திடம் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். மேலும் புற்றுநோயால் தான் பாதிப்படைந்து உயிரிழக்க நேருவதால் இந்த நோயால் பாதிப்படைந்துள்ளவர்களுக்கு உன்னால் முடிந்தவரை மருத்துவ நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
தாயாரின் பேச்சைக் கேட்கும் விதமாக மருத்துவ உதவிகள் கேட்கும் அனைவருக்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்துள்ளார் ஜெகந்த். இந்நிலையில் சுருளி அருவியில் 2 கோடி மதிப்பில் ஸ்ரீ ஜெயமீனா திருக்கோயில் என்று தன் தாய் பெயரில் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். அதற்கான திறப்பு விழாவினை இன்று நடத்தினர். இந்த திறப்பு விழாவில் புற்றுநோயால் பாதிப்படைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன் ஒருவனின் தந்தையிடம் ரூபாய் ஒரு லட்சத்தினை ரொக்க பணமாக வழங்கி நலத்திட்ட உதவிகளை தொடங்கினார்.
மேலும் தனது தாயார் கோயிலில் வந்து மருத்துவ உதவி கேட்கும் அனைவருக்கும் தன்னால் முடிந்தவரை மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.