“சாம்பியன்ஸ் டிராஃபியை வெல்வது மட்டும் இலக்கல்ல; இந்தியாவை வீழ்த்துவதும்தான்” - பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப்!
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இத்தொடரில் 8 அணிகள் விளையாடவுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காள தேசம் ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் லீக் சுற்றில் விளையாடவுள்ளன.
இதில் இந்திய அணியின் முதல் போட்டியானது பிப்ரவரி 20ம் தேதி நடைபெற உள்ளது. இதில் வங்கதேச அணியுடன் இந்தியா மோதுகிறது. பிப்ரவரி 23ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்ததாலும், இரு கிரிக்கெட் வாரியங்களுக்கிடையேயான தற்போதைய பதட்டங்களாலும் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் போட்டி கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.
2017-ல் சாம்பியன் டிராபி வென்ற பாகிஸ்தான் நடப்பு சாம்பியனாக இந்த போட்டியில் நுழைகிறது. பாகிஸ்தானில் போட்டி நடைபெற உள்ள கடாஃபி மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், இன்று அதனை அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரிப் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர்,
“கிட்டத்தட்ட 29 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய ஐசிசி போட்டியை நாங்கள் நடத்துவது பாகிஸ்தானுக்கு கிடைத்த நல்வாய்ப்பாகும். நம்மிடம் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். சமீப காலங்களில் நமது வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், உண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது மட்டும் பாகிஸ்தானின் இலக்கல்ல. நமது பரம எதிரியான இந்தியாவை வீழ்த்துவதும் பாகிஸ்தான் அணியின் இலக்காகும். ஒட்டு மொத்த பாகிஸ்தானும் நமது வீரர்களுடன் துணை நிற்கிறது” என்று கூறினார்.