திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு!
சென்னை திருவல்லிக்கேணி வைகுண்ட பார்த்தசாரதி திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி திதி அன்று வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படும். நாடு முழுவதும் உள்ள வைணவ கோயில்கள், அதாவது விஷ்ணு கோயில்களில் இந்த விழா கொண்டாடப்படும். குறிப்பாக தென்னிந்தியாவில் இந்த நாளானது வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், பத்ராசலம் சீதாராமச்சந்திர சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் மிக பிரம்மாண்டமாக இந்த நாளானது கொண்டாடப்பட்ட வருகிறது. மார்கழியில் வரும் வளர்பிறை ஏகாதசி திதி அன்று இரவு முழுவதும் கண் விழித்து அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டு, விஷ்ணு பெருமான் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
அந்த வகையில் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி திருக்கோயிலில் மேளதாளங்கள் முழங்க பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து இன்று அதிகாலை முதலே 1500 பக்தர்களுக்கு சிறப்பு தரிசனத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.
மேலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு கூடியிருக்கும்
நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, ஆம்புலன்ஸ் வசதி போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு இருக்கின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்க ஆங்காங்கே போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.