புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளும் 4 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு!
ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயிலின் அனைத்து கதவுகளும் 4 ஆண்டுகளுக்கு பின் இன்று திறக்கப்பட்டன.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலோடு ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் ஒடிசாவில் மொத்தமுள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 78 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. இந்நிலையில் நேற்று புவனேஸ்வரில் நடந்த பதவியேற்பு விழாவில், ஒடிசா மாநில முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார். துணை முதலமைச்சர்களாக பிரவதி பரிதா மற்றும் கே.வி.சிங் தியோ பதவியேற்றனர்.
இந்நிலையில், ஒடிசா முதலமைச்சராக பதவியேற்ற மோகன் சரண் மாஜி, முதல் உத்தரவாக புரி ஜெகந்நாதர் கோயிலின் 4 கதவுகளையும் திறக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதலமைச்சர், அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் ஒடிசா மக்களவை உறுப்பினர் சம்பித் பத்ரா ஆகியோர் முன்னிலையில் கோயிலின் அனைத்துக் கதவுகளும் திறக்கப்பட்டன. புரி ஜெகந்நாதர் கோயிலின் கதவுகள் சிம்ஹதுவாரா (சிங்கக் கதவு), அஹ்வதுவாரா (குதிரைக் கதவு), வியாக்ரதுவரா (புலிக் கதவு), ஹஸ்திதுவாரா (யானைக் கதவு) என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள் : தீ விபத்து ஏற்பட்டது எப்படி? – வெளியான திடுக்கிடும் தகவல்!
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மோகன் சரண் மாஜி பேசுகையில் கூறியதாவது :
"ஜெகந்நாதர் கோயிலின் கதவுகளைத் திறக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவு ஏற்கப்பட்டு இன்று காலை 6.30 மணியளவில் கதவுகள் திறக்கப்பட்டு, எங்களது எம்.எல்.ஏ-க்கள் மற்றும், எம்.பி-க்கள் கோயிலில் நடத்தப்பட்ட மங்கள ஆரத்தியில் கலந்து கொண்டனர். ஜெகந்நாதர் கோயிலின் வளர்ச்சிக்கும் மற்ற வேலைகளுக்கும் நிதியினை ஒதுக்க எங்களது அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், மாநில பட்ஜெட் தாக்கலின் போது, கார்ப்பஸ் நிதியாக கோயிலுக்கு ரூ.500 கோடி ஒதுக்கவும் முடிவு செய்துள்ளோம்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.