ஜப்பானில் வேகமாக பரவும் புதிய வகை நோய் - அச்சத்தில் உலக நாடுகள்!
ஜப்பானில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ‘சதை உண்ணும் பாக்டீரியா நோயின் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்து மீண்டு தற்போது தான் இயல்பு நிலைக்கு மெல்ல திரும்பியுள்ளது. இந்நிலையில் கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய நோயான ‘சதை உண்ணும் பாக்டீரியா நோய்’ பாதிப்பு ஜப்பான் நாட்டில் பரவி வருகிறது. கிட்டத்தட்ட 1000-க்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பரவியுள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஸ்ட்ரெப்டோகாக்கல் டோக்சிக் ஷாக் சிண்ட்ரோம் (STSS) என்றும் அழைக்கப்படும் இந்நோயின் பாதிப்பால் குறுகிய நாட்களிலேயே மரணம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த ஜூன் 2ஆம் தேதி வரை 977 பேருக்கு இந்த STSS பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு பதிவான மொத்த நபர்களின் எண்ணிக்கையே 941 தான்.
இந்த நோயின் அறிகுறிகள்
காய்ச்சல், குளிர், உடல் வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை இதன் முதற்கட்ட அறிகுறிகளாகும். இந்த பாதிப்பு ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் குறைந்த ரத்த அழுத்தம், உறுப்பு செயலிழப்பு, இதயத் துடிப்பு அதிகரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும்.
மேலும், நோய்ப் பாதிப்பு அதிகரிக்கும் போது மூட்டு வலி, வீக்கம், திசு இறப்பு, சுவாசப் பிரச்சனைகள், உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஏற்படும். இந்த பாதிப்பிற்கு உரியச் சிகிச்சை இல்லை என்றால் உயிரிழப்பே கூட நிகழும்.
தடுக்கும் வழிமுறை
இந்த STSS பாதிப்பைத் தடுக்க சுத்தமாக இருந்தாலே போதும். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். காயங்கள் இருந்தால் அதில் ஏதேனும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும். தொற்று பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். இதுபோல அடிப்படை சுகாதாரத்தைக் கடைப்பிடித்தாலே போதும் இந்த நோய்ப் பாதிப்பு நம்மைத் தாக்காது.
சிகிச்சை
இந்த STSS பாதிப்பு உள்ளவர்களுக்கு ஆன்ட்டி பயாடிக்ஸ் மாத்திரைகள் வழங்கப்படும். இவை பாக்டீரியாக்களை கொல்ல உதவும். மேலும், ரத்த அழுத்தத்தைச் சீராக்கவும் உடல் உறுப்புகள் சரியாக வேலை செய்யவும் தொடர்ந்து திரவ அடிப்படையில் உணவுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட இடத்தில் பாக்டீரியா பாதிப்பு இருந்தால் அது மற்ற இடங்களுக்குப் பரவாமல் இருக்க அறுவை சிகிச்சை மூலம் அந்த பகுதியை அகற்றப்பட வேண்டும். இந்த நோய்ப் பாதிப்பு ஏற்படும் போது விரைவாகச் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.