பிரான்ஸ் தேர்தல் முதல் சுற்று... இமானுவல் மேக்ரான் கட்சி பின்னடைவு!
பிரான்ஸ் நாடாளுமன்ற முதல்கட்ட தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்ற நிலையில் அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் மிக முக்கியமான நாடான பிரான்ஸில் தற்போது இரண்டு சுற்றுக்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் சுற்று வாக்குப்பதிவு ஜூன் 30ம் தேதி நடைபெற்றது. இறுதிக் கட்ட தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறுகிறது. நடைபெற்ற முதல்கட்ட தோ்தலில் தேசிய பேரணி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. அந்தக் கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்தன.
28 சதவீத வாக்குகளுடன் இடதுசாரி கூட்டணியான புதிய மக்கள் முன்னணி 2-ஆம் இடத்தைப் பிடித்தது. அதிபா் இமானுவல் மேக்ரானின் மையவாதக் கூட்டணிக்கு 20 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தொகுதிகள் எந்தக் கட்சிக்குக் கிடைக்கும் என்பது வரும் 7ம் தேதி நடைபெற இருக்கும் இறுதிக்கட்டத் தோ்தலில் தெரியும்.
இந்த தோ்தலில் தீவிர வலதுசாரிக் கட்சியான ‘தேசியப் பேரணி’ முன்னிலை பெற்றதையடுத்து, அந்தக் கட்சி ஆட்சிமைப்பதைத் தடுப்பதற்காக வலதுசாரி மற்றும் மிதவாதக் கட்சிகள் தங்களுக்குள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.