2025-ம் ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் தொடங்கியது!
2025ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று தொடங்கியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி கந்தர்வக்கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலேயே அதிக வாடிவாசல் கொண்ட மாவட்டமாகவும், அதிக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் மாவட்டமாகவும் புதுக்கோட்டை மாவட்டம் விளங்குகிறது.
இங்கு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் 31ஆம் தேதி வரை 120க்கும் மேற்பட்ட
ஜல்லிக்கட்டுக்கள், 30க்கும் மேற்பட்ட மஞ்சுவிரட்டுகள், 50க்கும் மேற்பட்ட
வடமாடு மஞ்சுவிரட்டு ஆகியவை நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இன்று இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இந்த போட்டியில் திருச்சி, திண்டுக்கல், மணப்பாறை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 750க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றுள்ளன. போட்டிக்காக 350க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, அதற்கான அடையாள அட்டைகளும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சுற்றிலும் முப்பதுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சீறிவரும் காளைகளை அடக்க உள்ளனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுமார் நான்கு பேர் உயிரிழந்தனர். 265க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.