“முதல் 40 தேஜஸ் போர் விமானங்கள் இன்னும் வந்து சேரவில்லை” - விமானப்படை தளபதி ஏபி சிங்!
“2010-ல் ஒப்பந்தம் போடப்பட்ட 40 தேஜஸ் போர் விமானங்கள் இன்னும் விமானப்படைக்கு வந்து சேரவில்லை,'' என விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.
‘Atmanirbharta in Aerospace: Way Ahead’ என்ற நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு பேசிய இந்திய விமானப்படை தளபதி ஏபி சிங்,
“தேஜஸ் போர் விமானத்தை 2016-ல் இதை அறிமுகப்படுத்தத் தொடங்கினோம். திட்டம் உருவான 1984-க்கு செல்வோம். 17 ஆண்டுகள் கழித்து, 2001-ல் அந்த விமானங்கள் பறந்தன. பிறகு 16 ஆண்டுகளுக்குப் பிறகு 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று 2024-ல் இருக்கிறோம். ஆனால் முதல் 40 விமானங்கள் இன்னும் விமானப்படைக்கு வரவில்லை. இதுதான் இங்குள்ள உற்பத்தி திறன்.
நாம் ஏதாவது செய்ய வேண்டும். நமக்கு போட்டி இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பல போட்டியாளர்கள் இருந்தால் தான் பணிகள் நடக்கும். இல்லையென்றால் எதுவும் மாறாது.
நேரம் மிக முக்கியமான விஷயம். ஆராய்ச்சியாளர்களுக்கு நாம் அதிக வாய்ப்பளிக்க வேண்டும். தோல்விகள் இருக்கும், தோல்விகளைக் கண்டு பயப்பட வேண்டாம், தோல்விக்கு பயப்படுவதால் நாம் நிறைய நேரத்தை இழக்கிறோம் என்று நினைக்கிறேன். நாம் காலக்கெடுவைச் சந்திக்கவில்லை என்றால், தொழில்நுட்பத்தால் எந்தப் பயனும் இல்லை. எனவே நமது தோல்விகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்த தோல்விகளைப் பற்றி பயப்பட வேண்டாம்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான நிதி 5 சதவீதம் மட்டுமே உள்ளது. அதனை பாதுகாப்பு பட்ஜெட்டில் 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். இந்த நிதிகள் அதிகரிக்கப்படுவதையும், அவை தனியார் நிறுவனங்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்தார்.
சீனா தனது 6வது தலைமுறை போர் விமானத்தை சோதித்த நிலையில், தேஜஸ் போர் விமானங்கள் பற்றாக்குறை குறித்து இந்திய விமானப்படை தளபதி பேசி உள்ளார். 1980களின் பிற்பகுதியில் இருந்து பாதுகாப்பு படையில் MiG-21 மற்றும் Su-7 இலகுர போர் விமானங்களுக்கான மாற்றாக, தேஜாஸ் விமானங்களை பயன்படுத்த இந்தியா முடிவு செய்தது. தேஜஸ் போர் விமானம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) மூலம் தயாரிக்கப்படுகிறது.
இந்திய விமானப்படை, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ரூ.36,468 கோடி ஒப்பந்தத்தில் 83 தேஜஸ் Mk1A வகைகளை ஆர்டர் செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், இந்திய விமானப்படைக்கு மேலும் 97 தேஜஸ் ஜெட் விமானங்களை வாங்குவதற்கான திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியது.