சலார் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்து சாதனை!
பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு பேன் இந்தியன் மொழிகளில் வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்தியா சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பிரபாஸ். இதற்கு முன்பும் அவர் நிறைய தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கேஜிஎஃப்-2 திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை நாயகனாக வைத்து ‘சலார்’ படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடித்துள்ளார். பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று உலக முழுவதும் கோலாகலமாக வெளியாகியது. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.178.7 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சலார் படம் இந்திய அளவில் ரூ.95 கோடி வசூல் செய்துள்ளது. இதன் மூலம், 2023ம் ஆண்டில் இந்திய அளவிலும், உலகளவிலும் அதிக வசூல் செய்த இந்தியப் படம் எனும் சாதனையை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் உலகளவில் முதல் நாளிம் ரூ. 148.5 கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருந்தது. தற்போது இந்த சாதனையை சலார் திரைப்படம் முறியடித்துள்ளது. மேலும் இப்படம் ரிலீசுக்கு முன்னேரே பிரீ புக்கிங் கலெக்ஷனில் கிட்டத்தட்ட ரூ.30 கோடி அளவில் வசூலை அள்ளியது குறிப்பிடத்தக்கது.