“படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை!” அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், முதல்நாள் போலவே வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது. குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போதுவரை ரூ.16 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. வாழை திரைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழை படத்தை பார்த்ததோடு, அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது வாழை திரைப்படம். ‘திரைப்படத்தின் வெற்றி’ என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் ‘வாழை’ ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர்
மாரி செல்வராஜ் சாரை இன்று நேரில் வாழ்த்தினோம். விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.