நெருங்கும் தீபாவளி பண்டிகை! சென்னை தியாகராய நகரில் குவியும் மக்கள்!
தீபாவளி பண்டிகை நெருங்குவதை அடுத்து புத்தாடைகள் வாங்க சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் குவிய தொடங்கியுள்ளதால், அப்பகுதி எங்கும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
உயர் கோபுரங்கள் அமைத்தும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் காவல் துறையினர் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கடைசி வார இறுதி நாட்களான இன்றும் நாளையும் சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக கூட வாய்ப்புள்ளது.
அந்த வகையில், இன்று சனிக்கிழமை காலை முதல் சென்னை தியாகராய நகர் பகுதியில் உள்ள கடைவீதிகளில் புத்தாடைகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்த வண்ணம் உள்ளனர். பொதுவாகவே வார இறுதி நாட்களில் சென்னை தியாகராய நகர் பகுதி மக்கள் கூட்டத்துடன் காட்சியளிக்கும்.
அதிலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகள் மற்றும் விழாக்காலங்களில் சென்னை தியாகராய நகர் பகுதி பொதுமக்கள் கூட்டத்தில் அலைமோதுவது வழக்கம். குறிப்பாக தீபாவளிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள், இனிப்புகள், பட்டாசுகள் என அனைத்தையும் வாங்குவதற்காக பொதுமக்கள் குவிக்கின்றனர்.
நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரிக்கும் என்று கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் ஆன்லைனில் புத்தாடைகள் வாங்குவதைவிட நேரில் வாங்குவதே பொருத்தமாகவும் சரியான அளவில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஒரு சிலர் இந்த ஆண்டு ஆடைகள் விலை அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்தனர். பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.