"தண்டனைக் களமாகும் பெண்ணுடல்" - நூல் அறிமுகம்
தண்டனைக் களமாகும் பெண்ணுடல் எனும் புத்தகம் பற்றிய அறிமுகத்தை விரிவாக காணலாம்.
பெண்ணியம் குறித்த சிந்தனைகள் உலகம் முழுக்க ஓரளவுக்கு பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்தான் மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று அதற்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அவசியமற்ற ஒன்று என சட்டம் இயற்றும் அவையிலேயே மத்திய அமைச்சர் ஒருவர் பேசியது நாடுமுழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒடுக்கப்படுபவர்களிலும் ஒடுக்கப்படுபவர்களாக இருக்கிற பெண்களின் பிரச்னைகள் குறித்தும் உரிமைகள் குறித்தும் பெரும்பாலும் பெண்கள் மட்டுமே பேசும் அவல நிலை என்பது ஒரு நாகரிக சமூகத்திற்கு அழகல்ல. ஆனாலும் கூட அவர்கள் தான் பேச வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை சமூகம் சாதரணமானது என கண்டும் காணாமல் விடப்படுகிற மிக முக்கியமான சில பிரச்னைகள் குறித்து தண்டனைக் களமாகும் பெண்ணுடல் என்கிற புத்தகத்தில் மிக நுட்பமாக பேசுகிறார் இதன் ஆசிரியரும், நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் பிரிவின் பொறுப்பாசிரியருமான சுகிதா சாரங்கராஜ்.
பெண்களும் பொதுப் போக்குவரத்தும் :
பொதுப் போக்குவரத்து போன்ற ஒரு கட்டமைப்பு சமூகத்தில் சரிபாதி இருக்கிற பெண்களுக்கு எவ்வளவு அசௌகரியத்தை தந்து கொண்டிருக்கிறது என்பதை பேசுவது கூட மிக குறைவாக நடக்கிறது. சக்கரம் வந்த பிறகுதான் சமூகத்தின் வளர்ச்சி அதிவேகமெடுத்ததாக சொல்வார்கள், அதே போல பயணங்கள்தான் பெண்களின் முன்னேற்றத்திற்கு மிக முக்கியமான கூறுகள் என தமிழ்நாட்டை பின்பற்றி பல மாநிலங்களும் கட்டணமில்லா பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றன.
ஆனால் அவற்றில் கழிவறையோ, மாதவிடாய் காலங்களில் பெண்கள் நாப்கின்களை மாற்றுவதற்கான குறைந்தபட்ச வசதியோ உண்டா என்றால் 100 சதவிகிதம் இல்லை என்பது தான் பதிலாக வரும். இப்படியாக பேசத் துணியாத , பேசப்படாத மிக முக்கியமான பிரச்னைகளை ஆசிரியர் விரிவாக பேசுகிறார்.
மொத்தமாக 30 கட்டுரைகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. பெண்கள், குழந்தைகள், , மாற்றுத்திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள் படும் அவஸ்தைகள் குறித்து பேசுகிறது இந்நூல்.
தீட்டு எனும் தீண்டாமை முதல் பாலியல் வன்கொடுமை வரை :
மாதவிடாய் என்பது இயற்கையான ஒன்று என புரிந்து கொள்ளவும், அதனை இயல்பான ஒன்றாக குடும்பத்தினர் பார்க்கவும் கற்றுக் கொடுக்க வேண்டிய நிலையில்தான் தற்போது நவீன சமுகம் உள்ளது. மாதவிடாய் ஏற்படும் போது பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் Mood Swing போன்றவற்றால் இயல்பாக இருப்பது கடினம். அப்படி இருக்கையில் சடங்குகளின் பெயரால், மதங்களின் பெயரால் மற்றும் பழக்க வழங்கங்களின் பெயரால் மேலும் மேலும் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் தொல்லைகள் தந்து கொண்டிருக்கும் சமூகத்தை எப்படி சமத்துவ சமூகமாக எடுத்துக் கொள்ள முடியும். மாதவிடாய் பிரச்னை குறித்து ஆசிரியர் எழுதிய வரிகள் சமூகத்தில் நடைபெறும் அவலங்களை பொட்டில் அறைந்தது போல் உள்ளது..
“ தொடைகளுக்கு இடையே வழியும் உதிரத்தின் கோரத்தை விட அந்த தருணங்களில் பொது இடங்களில் கழிப்பறைகள் இல்லாத இந்த தேசம் மீதும் காரி உமிழ நேரிடும்”
நிர்பயா வழக்கு முதல் கேரளாவின் ஜிஷா வழக்கு வரை பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிக்கு பெண்கள் மீது வெறியாட்டம் நிகழ்த்துவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. இங்கே அதிகாரம் எல்லாம் கொடுக்கப்படவில்லை பெண்கள் மீது தொடர்ச்சியாக கட்டமைக்கப்பட்டு வந்த பொதுப் புத்திதான் அவர்கள் மீது வன்கொடுமை நிகழ்த்த காரணமாக இருக்கிறது. சக பாலினமாக, சக மனிதனாக பெண்களை நடத்த வேண்டும் என கற்றுக் கொடுக்காத வரை எதுவுமே மாறப் போவதில்லை. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகிற பெண்களுக்கு ஊடகங்கள் வைக்கும் பெயர் குறித்து ஆசிரியர் இப்படி எழுதுகிறார்..
”இப்போதெல்லாம் இந்தியாவில் பெண்களுக்கு பெற்றோர் வைக்கும் பெயரை விட இப்படி பாலியல் வன்புணர்வால் இறப்பவர்களுக்கு ஊடகங்கள் பெயர் வைப்பது நடைமுறையான ஒன்றாக மாறிவிட்டது”
இதேபோன்ற சமூகத்தை நோக்கிய பல கேள்விகள் புத்தகங்கள் முழுக்க எழுப்பியிருக்கிறார் ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ்.
தண்டனைகளும் - நவீன சமூகமும்.. :
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அந்தத்த நேரத்தில் அவசரகதியில் பொதுமக்கள் அல்லது கூட்டு மனசாட்சிகள் சொல்லும் தண்டனைகள் குறித்து ஆசிரியர் பல கேள்விகளை முன்வைக்கிறார். பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு உலகம் முழுக்க பல கொடூரமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இன்னும் கொடூரமான தண்டனைகளையும் பலர் முன்வைக்கிறார்கள். நாகரீகம் எட்டாத சமூகத்தில் இத்தகைய தண்டனைகள் வழங்கப்பட்டிருக்கலாம் ஆனால் நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் தண்டனைகளும் நாகரிகமடைந்ததாகவே இருக்க வேண்டும் என மிக அழுத்தமாகவே பேசுகிறார்.
அதேபோல நிர்பயா, ஜிஷா, தெலங்கானா பெண் மருத்துவர் திஷா என பிரபலமாக அறியப்பட்ட வழக்குகளில் மட்டுமே வழக்கின் போக்கும் தண்டனையும் உடனடியாக வழங்கப்பட்டது. ஆனால் பேசப் படாத, வழக்காக்கப்படாத, நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிற வழக்குகள் ஏராளம். 2020ம் ஆண்டின் புள்ளி விபரங்களின் படி நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை மற்றும் POCSO குற்றங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 2.4லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
நவீன பிரச்னைகளும் பெண் குழந்தைகளும் :
கடந்த வாரம் முழுக்க இணைய தளங்களில் கவனம் பெற்ற வார்த்தை “Virtual Reality Gang Rape” . இங்கிலாந்தைச் சார்ந்த 16வயது சிறுமியை Virtual Reality Online Game ஐ பயன்படுத்தி ஆன்லைனில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது ஒரு ஆன்லைன் கும்பல். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமையால் நேரடியாக பாதிக்கப்படாவிட்டாலும், Virtual Reality மூலம் மன ரீதியிலும், உளவியல் ரீதியிலும் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர் சிறுமியின் பெற்றோர்.
குழந்தைகள், சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை களைய பல முயற்சிகளை எடுக்க வேண்டிய காலத்தில்தான் நவீன பிரச்னைகளை அணுகுவது குறித்தும் மிகத் தீவிரமாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. விரல் நுணியில் விபரீதம் எனும் கட்டுரை இணைய உலக மோசடி மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து தடுப்பது குறித்து விரிவாக பேசுகிறது.
”ஆண்களுக்கு என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. வாழ்தல் குறித்த புரிதல், சுய ஒழுக்கம், மனிதர்கள் - குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மீதான மதிப்பீடுகள் என்று எதுவுமே இல்லை. இத்தகைய நிலை மாறாதவரை இந்தியாவின் மகள்களுக்கு ஏன் அம்மாக்களுக்கும் பாட்டிகளுக்கும்கூட ஒருபோதும் இல்லை. ”
இதேபோல பெண்களின் அரசியல், அதிகாரம், பாலினத் தடை, இனப்பெருக்க ஆரோக்கியம் போதை உள்ளிட்ட பல தலைப்புகளின் கீழ் இப்புத்தகம் பேசுகிறது. மொத்தத்தில் பாலின சமத்துவத்திற்கான போராட்டம் என்பது பெண்களுக்கான போராட்டம் மட்டுமல்ல, மானுடத்திற்கான போராட்டம் என்பதை மிக நேர்த்தியாக விவரிக்கிறது இந்த நூல். தண்டனைக் களமாகும் பெண்ணுடல் எனும் இந்த நூலை “ஹெர் ஸ்டோரிஸ் (Her Stories) “ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
-ச.அகமது, நியூஸ்7 தமிழ்