குதிரையில் ஊர்வலம் வந்த மணமகனுக்கு நேர்ந்த கதி... சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்!
மத்திய பிரதேச மாநிலம் செபூர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் ஜாட் (27). இவருக்கும், அரசு பள்ளி ஆசிரியைக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் செபூர் டவுனில் உள்ள ஜாட் விடுதியில் பிரமாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்தனர். திருமணத்தை ஒட்டி பிரதீபை குதிரை மீது அமர வைத்து ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இதையும் படியுங்கள் : பிரபல தென்கொரிய நடிகை மரணம்!
மேளதாளங்களுடன் திருமண ஊர்வலம் கோலகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது சிறிது நேரத்திலேயே திடீரென பிரதீப் ஜாட் குதிரையில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக பிரதீப்பை எழுப்ப முயன்றனர். ஆனால் பிரதீப் கண்விழிக்கவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் திருமணத்துக்கு வந்தவர்கள் பிரதீப்பை உடனடியாக அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பிரதீப்பை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் குதிரை ஊர்வலத்தின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமண ஊர்வலத்தின் போது மணமகன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.