புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா! பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு!
புகழ்பெற்ற காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா விண்ணேற்பு பெருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவின் திருத்தேர் பவனியின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று, கும்பிடு சேவை செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காமநாயக்கன்பட்டியில் புகழ்பெற்ற தூய
பரலோக மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
தேம்பாவனி எழுதிய வீரமாமுனிவர் இந்த பேராலயத்தில் பங்கு தந்தையாக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தூய பரலோக மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் விண்ணேற்பு பெருவிழா மிகவும் புகழ்பெற்றது.
இந்தாண்டுக்கான விண்ணேற்பு பெருவிழா கடந்த 6-ம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கியது. விழாவில், தினமும் மறையுரை, திருப்பலி, நற்கருணை ஆசீர் ஆகியவை
நடைபெற்றது.இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து பங்குத்தந்தைகள் கலந்து கொண்டு
மறையுரை வழங்கி திருப்பலி நிறைவேற்றினர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று (15.08.2024) அதிகாலை நடைபெற்றது. பாளை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தேரடி திருப்பலி நிறைவேற்றினார். இதனை தொடர்ந்து வாண வேடிக்கை முழங்க ஆரோக்கிய மாதா மற்றும் பரலோக மாதா சொரூபங்கள் தாங்கிய தேர் பவனி தொடங்கியது. தேருக்கு பின் ஏராளமான மக்கள் கும்பிடு சேவை செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.மேலும் திருத்தேர் பவானியின் போது திருத்தேர்கள் மீது மக்கள் பூக்களை எறிந்தனர். அதுமட்டுமின்றி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிராத்தனை செய்தனர்.
இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான
மக்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். விண்ணேற்பு பெருவிழாவை முன்னிட்டு
கோவில்பட்டி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. மேலும் கோவில்பட்டி டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் பலத்த
போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர் மற்றும் பங்குத்தந்தையுமான அந்தோனி குரூஸ், உதவி பங்குதந்தை அந்தோனி ராஜ், மரியின் ஊழியர் சபை அருள் சகோதரிகள், புனித தெரசாவின் கார்மேல் சபை அருள் சகோதரிகள் மற்றும் காமநாயக்கன்பட்டி,
எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், செவல்பட்டி கிறிஸ்தவ மக்கள் செய்து இருந்தனர்.