ஆஸ்கர் விருது பெற்ற பாராசைட் பட நடிகர் மரணம்!
தென் கொரிய திரைப்படமான “பாராசைட்” என்ற படத்தில் நடித்து பிரபலமான ‘லீ சன் கியூன்’ காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாராசைட் என்கிற தென் கொரிய படம் கடந்த 2019-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இத் திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகளை அள்ளிச் சென்று உலகளவில் கவனம் ஈர்த்தது.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான லீ சன் கியூன் மர்மமான முறையில் இன்று காரில் இறந்து கிடந்ததாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 48. போதைப்பொருள் வழக்கில் சிக்கி விசாரணையில் இருந்த லீ சன் கியூன், நேற்று (டிச.26) தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உடலைப் பூங்கா ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரிலிருந்து மீட்டதாகவும் தெரிவித்த காவல்துறையினர், அவருடைய தற்கொலைக் குறிப்புகளை கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் தென் கொரிய சினிமாத்துறையினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணைக்கு பின்னர் லீ சன் கியூன் இப்படி மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராது கொலை செய்துள்ளார்களா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.