"பென்னிகுவிக்கை தலைமுறைகள் கடந்தும் கவுரவப்படுத்தும் தமிழர்கள்" - இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலித்த குரல்!
முல்லை பெரியாறு அணையை கட்டி 5 மாவட்ட மக்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தமிழர்கள் இன்றும் கவுரவப்படுத்தி வருவதாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டப்பட்டது.
நடந்து முடிந்த இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. கடந்த ஒரு வாரமாக நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டதொடரில் புதிதாக பதவியேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் முதல் நாடாளுமன்ற பேச்சை தொடங்கினர். முல்லை பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுக்கின் ஊரான கேம்பர்லீ எனும் நகரத்தில் உள்ள சர்ரே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட ஆல் பிங்கர்டன், தனது நாடாளுமன்ற உரையில் கர்னல் ஜான் பென்னிகுக்கின் புகழை ஒலிக்க செய்தார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆல் பிங்கர்டன் கூறுகையில் “முல்லை பெரியாறு எனும் அணையைக் கட்டி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்திய கர்னல் ஜான் பென்னிகுக்கின் நகரில் இருந்து நான் தேர்ந்தெடுக்கபட்டுள்ளேன். கர்னல் ஜான் பென்னிகுக் இறந்து 100 வருடங்கள் கடந்தும் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு எனும் மாநிலத்தில் இன்றும் தங்களின் பிள்ளைகளுக்கு அவரின் பெயர் வைக்கிறார்கள். அவரை தலைமுறை தலைமுறையாக கவுரப்படுத்திறார்கள்.
ஆனால் அவரின் நாடான இங்கிலாத்தில் அவரை யாருக்கும் தெரியாது என்பது வேதனை அளிக்கிறது. அவரை உரிய முறையில் கவுரப்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அதற்கான முயற்சியை நான் தொடர்வேன் என்றார்.
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலின் போது இங்கிலாந்து எம்.பி. ஆல் பிங்கர்டன் தமிழ்நாடு அரசு வழங்கிய கர்னல் ஜான் பென்னிகுக் சிலை முன் நின்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறியது குறிப்பிடத்தக்கது.