இஸ்ரேலை ஆட்டிப் படைத்த #Engineer... யார் இந்த யாஹ்யா அய்யாஷ்?
ஹமாஸ் அமைப்பின் முக்கிய நபராக இருந்த யாஹ்யா அய்யாஷ் எவ்வாறு கொல்லப்பட்டார் என்பதை பற்றி பார்க்கலாம்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது.
சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், இஸ்ரேல் - பாலஸ்தீனத்திற்கும் இடையே கடந்த 1948 ஆண்டில் இருந்தே போர் நடந்து வருகிறது.
ஹமாஸ் அமைப்பில் மிகவும் முக்கிய நபராக இருந்தவர் யாஹ்யா அய்யாஷ். இவர் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்தவர். இவரை அனைவரும் என்ஜினியர் என்றே அழைப்பர். இவர் வெடிப்பொருள்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
வெடிபொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்தபோதும், வீட்டில் இருக்கும் சோப்புத் தூள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியே இவர் வெடிகுண்டுகளை தயார் செய்வார் என்று கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர் இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தி இருக்கிறார். கடந்த 1992 ம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று தோல்வியடைந்தது. அதில் சம்பந்தப்பட்ட தற்கொலைப் படை வீரர்கள் 3 பேரை இஸ்ரேல் படையினர் பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் என்ஜினியரை பற்றிய தகவல் இஸ்ரேலுக்கு கிடைத்தது.
இஸ்ரேல் தேடுதல் வேட்டையை தொடங்கிய நிலையில் அவரின் மனைவியையும், மகனையும் காஸாவில் ஒரு வீட்டில் தங்க வைத்தார். இவர் அந்த வீட்டில் தங்காமல் சிறிது தொலைவில் ஒரு வீட்டில் தங்கி வெடிகுண்டுகளை தயார் செய்து வந்தார். அதே நேரத்தில் புர்கா அணிந்துக்கொண்டு யாருக்கும் தெரியாமல் தனது மனைவியையும், மகனையும் சென்று பார்ப்பார்.
இவரின் சொந்த ஊர் அங்கிருந்து தொலைவில் இருந்ததால் அவரின் பெற்றோரை பார்க்க முடியாமல் தவித்தார். இவரின் நண்பரான ஒசாமா என்பவரின் வீட்டில் இருந்த தொலைபேசி வாயிலாக இவர் தனது பெற்றோரிடமும் பேசி வந்திருக்கிறார். அந்த தொலைபேசி சில நாட்களில் வேலை செய்யாமல் போனதால், வேறொரு செல்போன் எண்ணை தனது தந்தையிடம் கொடுத்திருக்கிறார்.
யாஹ்யா அய்யாஷ் வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்தபோது தனது செல்போனை தேடி இருக்கிறார். ஆனால் அது அவருக்கு கிடைக்கவில்லை. அந்தவாறே அவர் தூங்கிவிட்டார். மறுநாள் காலை அய்யாஷை பார்க்க வந்த ஒசாமா அவரிடம் "உனது அப்பா அழைத்தார்" எனக் கூறி அய்யாஷின் போனை கொடுத்திருக்கிறார். உடனடியாக தொலைபேசியை வாங்கிய அய்யாஷ் "அப்பா எப்படி இருக்கீங்க" என்றார். உடனே அந்த வெடிப்பொருள் நிரம்பி இருந்த போன் வெடித்து சிதறியது. அய்யாஷ் தொலைபேசி வைத்திருந்த வலது பக்க முகம் சிதைந்தது. அந்த இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த படுகொலை சம்பவம் வரலாற்றில் பேசும்பொருளாக மாறியது.
அந்த செல்போனுக்குள் வெடிப்பொருள் சென்றது எப்படி?
அய்யாஷின் நண்பரான ஒசாமா ஹமாத்தின் உறவினர் கமல் ஹமாத். இவர்தான் இஸ்ரேலின் புலனாய்வு அமைப்புக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. இவர் அவசரத் தேவை எனக்கூறி செல்போனை வாங்கிச் சென்று அதில் 50 கிராம் அர்டிஎக்ஸ் வெடிபொருளை நிரப்பினார். இந்த செல்போன் தான் அந்த செல்போன் வெடிக்க காரணம். இந்த வேலைக்காக அவருக்கு அப்போதே ரூ.3.55 கோடி கொடுக்கப்பட்டு, அமெரிக்காவுக்கு விசா கொடுத்து அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.