அமெரிக்காவில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்... முன்னிலையில் கமலா ஹாரிஸ்!
அமெரிக்காவில் சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு முன்னிலை கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் முதலில் பைடன் போட்டியிட இருந்த நிலையில், பல காரணங்களால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதனையடுத்து கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கமலா ஹாரிஸ் போட்டியில் வந்ததிலிருந்தே, அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
பல சுவாரசியமான நிகழ்வுகளும் அமெரிக்காவில் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகளும் வந்துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்விங் ஸ்டேட்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் முக்கியமான ஸ்விங் மாகாணங்களாக இருக்கும் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் டிரம்பை பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.
ஆக.5 முதல் 9 வரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் மூன்று மாநிலங்களிலும் ட்ரம்பைவிட ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார். 3 மாகாணங்களிலும் கமலா ஹாரிஸுக்கு 50%, ட்ரம்புக்கு 46% ஆதரவு உள்ளது. முன்னர் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளில் ட்ரம்புக்கே இந்த மாகாணங்களில் முழு ஆதரவு இருந்தது. இந்நிலையில் இந்த முடிவுகள் கமலா ஹாரிஸ் தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதேநிலை தொடர்ந்தால் கமலா ஹாரிஸ் நிச்சயம் வெற்றிப் பெறுவார் எனக் கூறப்படுகிறது.