”பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர்”- சபாநாயகர் அப்பாவு கடும் விமர்சனம்!
திருநெல்வேலியில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”மாநில கல்விக்கொள்கையின் அடிப்படையே இரு மொழி கொள்கைதான். சாமானியனும் கல்வி கற்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இரு மொழி கொள்கையானது அண்ணா காலத்திலேயே போராடி கொண்டுவரப்பட்டது. மாநில கல்விகொள்கையில், பதினோராம் வகுப்பு பொது தேர்வு மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது அதிலும் காலாண்டு அரையாண்டு தேர்வுகள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ள்து. ஆனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் மூன்றாம் வகுப்பு ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்த ஆணையிட்டுள்ளது. அந்த தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் குல தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். குழந்தைகள் தொழிலுக்கு செல்லக்கூடாது என்கிற தடை சட்டம் இருந்தபோதிலும் இதுபோன்று மத்திய அரசின் திட்டங்களால் குழந்தை தொழிலாளர்களை உருவாக்கும் நிலை ஏற்படும். குருகுல கல்வி பயின்றவர்களுக்கு நேரடியாக ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நேரடியாக சேர்க்கை வழங்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு 40 முதல் 60 லட்சம் ரூபாய் வரை ஆராய்ச்சி படிப்புக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. எந்த வகையில் சரியானது? எனவும் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “தேர்தல் நாளன்று மாலை ஐந்து மணிக்கு மேலாக ஏழு முதல் 10 சதவீத வாக்குகள் கூடுதலாக பதிவாகிறது. இது குறித்து கேள்வி எழுப்பினால் தேர்தல் ஆணையம் முறையாக பதில் சொல்வதில்லை. விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோள்களில் ஏற்படும் சிறிய பிரச்சனைகளை இங்கிருந்து சரி செய்ய முடிகிறது. 1.1/2 ரூபாய் evm மிஷினில் மாற்றம் செய்ய முடியாதா? ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி மக்களே வாக்களிக்காமல் நேரடியாக பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் முறையை 5மணிக்கு மேல் செயல்படுத்துகிறார்கள். இதுகுறித்து கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டு சொல்கிறது. மன்னிப்பு கேட்க சொல்ல அவர்கள் அரச பரம்பரை அல்ல. பிரதமரால் நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையர் என்பவர் புரவாசல் வழியாக பதவிக்கு வந்தவர். பிரதமரும் அரசர் அல்ல. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாகும் செயலாக இருக்கிறது. தேர்தல்கள் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் வகையிலேயே நடந்துள்ளது” என தெரிவித்தார்