For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாதயாத்திரைக்கு சென்றபோது தொலைந்து போன நாய்... 250 கி.மீ-ஐ கடந்து வளர்த்தவரை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம்!

10:17 AM Aug 01, 2024 IST | Web Editor
பாதயாத்திரைக்கு சென்றபோது தொலைந்து போன நாய்    250 கி மீ ஐ கடந்து வளர்த்தவரை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம்
Advertisement

கர்நாடகா மாநிலத்திலிருந்து பாத யாத்திரையாக மகாராஷ்டிராவுக்கு சென்ற பக்தர்கள் குழுவுடன் சென்ற நாய் தொலைந்துவிட்டதாக நினைத்து பக்தர்கள் வீடு திரும்பி நிலையில், 250 கி.மீ-ஐ கடந்து நாய் பத்திரமாக வீடு திரும்பியிருக்கிறது.

Advertisement

கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம் யமர்கனி கிராமத்தை சேர்ந்தவர் கமலேஷ் கும்பர்.  அவர் நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.  அதற்கு மகாராஜா என பெயர் வைத்திருந்தார்.  கமலேஷ் ஆண்டுக்கு ஒரு முறை ஊர் மக்களுடன் சேர்ந்து மகாராஷ்டிரா மாநிலம் பந்தர்பூருக்கு பாத யாத்திரைக்கு செல்வது வழக்கம்.  கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் கமலேஷ் யாத்திரையை தொடங்கினார்.  அப்போது அவர் வளர்த்த நாயும் அவரை பின்தொடர்ந்து சென்றது.

போகும் வழியில் கமலேஷ் தங்கும் இடத்தில் மகாராஜாவும் தங்கியிருந்தது. அவர்கள் சாப்பிட்ட உணவில் கொஞ்சம் மகாராஜாவுக்கு வழங்கினர்.  இப்படியாக சில நாட்கள் பயணித்து 250 கி.மீ தள்ளி உள்ள பந்தர்பூருக்கு மகாராஜா சென்றிருக்கிறது. பந்தர்பூருக்கு சென்ற மக்கள் வழிபாடு நடத்தினர்.  எல்லாம் முடிந்த பின்னர் சொந்த ஊருக்கு கிளம்பும் போது, அவர்களுடன் வந்த மகாராஜாவை காணவில்லை.  எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அக்கம் பக்கம் விசாரித்ததில்,  மகாராஜா வேறு குழுவுடன் சென்றுவிட்டதாக கூறினர். எங்கு தேடியும் கிடைக்காததால், கமலேஷ் உள்ளிட்டோர் மகாராஜாவை அப்படியே விட்டுவிட்டு கடந்த 14ம் தேதி வீடு திரும்பினர்.  அவர்கள் வீடு திரும்பிய அடுத்த நாளே கமலேஷின் வீட்டு வாசலில் மகாராஜா வாலாட்டியவாறு நின்றுக்கொண்டிருந்திருக்கிறது.  நாயை பார்த்து ஒரு நிமிடம் அவர் திகைத்து நின்றார்.  உள்ளூர் மக்களும் இதனை பிரமிப்புடன் பார்த்தனர்.

சுமார் 250 கி.மீ-ஐ கடந்து மகாராஜா எப்படி வந்து சேர்ந்தது என்றே தெரியவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.  தொடர்ந்து, மகாராஜாவுக்கு மாலை அணிவித்து கும்கும பொட்டு வைத்து ஊர் மக்கள் அமோக வரவேற்பளித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags :
Advertisement