விஜயகாந்த் குரலில் பேசி வாக்கு சேகரித்த தேமுதிக வேட்பாளர்!
தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குரலில் பேசி வாக்கு சேகரித்தார்.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து, வேட்பாளர்களை அறிவித்து, தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில் தஞ்சாவூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிவனேசன் அவரது சொந்த ஊரான திருமலைக்கோட்டையில் தீவிர வாக்கு சேகரிப்பை தொடங்கி, கண்ணத்தங்குடி, குலமங்கலம், ஊரச்சி ஆகிய பகுதிகளில் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது தேமுதிக வேட்பாளர் சிவனேசனுக்கு அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, மாலை பொன்னாடைகள் அணிவித்து சிறப்பாக வரவேற்பு அளித்தனர்.
தேமுதிக வேட்பாளர் சிவனேசனுடன் அதிமுக மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர் மற்றும் அதிமுக, தேமுதிக கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் இருந்தனர். வேட்பாளர் சிவனேசன் தனது சொந்த ஊரான திருமலைக்கோட்டையில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் குரலில் பேசி வாக்கு சேகரித்தார். இது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் தனக்கு வாக்களித்தால் ஒரத்தநாடு பகுதிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் பெற்று தருவேன் என அவர் உறுதி அளித்தார்.