“நான் பேசியதை திமுகவினர் திசை திருப்பி விட்டுள்ளனர்!” - குஷ்பு விளக்கம்!
தாய்மார்களுக்கு ரூ.1000 கொடுப்பதற்கு பதில் டாஸ்மாக்கை மூடினால் அவர்கள் தன்மானத்தோடு வாழ்வார்கள் என்றே கூறினேன். ஆனால் திமுகவினர் இதை திசை திருப்பிவிட்டுள்ளனர் என பாஜகவை சேர்ந்தவரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை செங்குன்றத்தில் பா.ஜ.க சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பாஜகவை சேர்ந்த நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நடிகை குஷ்பு, “தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சைப் போட்டால் அவர்கள் தி.மு.க-வுக்கு வாக்களிப்பார்களா? என பேசியிருந்தார். இதற்கு திமுகவினர் மற்றும் பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், இதற்கு குஷ்பு விளக்கம் அளித்து தனது X தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:
உண்மை எப்படி பயத்தை கிளப்பி விடும் என்பதை நான் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன். திமுகவில் உள்ள அத்தனைப் பேரும் அமைச்சர்களில் இருந்து திமுக பேச்சாளர்கள் மற்றும் தொண்டர்கள் வரை அனைவரும் என்னைப்பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். வீடியோ வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். பழைய ட்வீட் மற்றும் முன்னர் ஏதோ சொன்னதையெல்லாம் தற்போது வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் எதையும் டிலிட் செய்யாமல் வைத்துள்ளேன். நான் பேசும் போது ஒரு ஐடி விங்கோ அல்லது வார் ரூம் வைத்துக்கொண்டு பேசுவதில்லை. நேருக்கு நேர் பேசக்கூடிய தைரியம் எனக்கு இருக்கு. அததான் இப்போது செய்கிறேன். எத்தனைப்பேர் எனக்கு எதிராக எச்சரிக்கையாக பேசியிருக்கிறார்கள். திமுகவில் நான் ரொம்ப மரியாதை வைத்திருக்கக்கூடிய ஒரு அமைச்சர் உள்பட பலர் எச்சரிக்கை விட்டுள்ளனர்.
நான் ஒரு விசயம் மட்டும் சொல்கிறேன். ஏன் இவ்வளவு பயந்துள்ளீர்கள். குஷ்பு பேசினால் அவ்வளவு பயமா? ஏனென்றால் குஷ்பு உண்மையை பேசுவாள். தைரியமாக பேசுவாள். நான் பேசியதற்கு தவறான அர்த்தம் எடுத்துக்கொண்டு, அதை மட்டும் மக்களிடம் எடுத்துச்சென்று நீங்க மக்களை திசை திருப்புவதை பார்க்க குஷ்பு இங்கு இல்லை. நீங்க எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்றி இருக்கிறீர்கள்? எந்தெந்த வகையில் ஏமாற்றிக்கொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும், எல்லாருக்கும் தெரியும்.
நான் இன்று உங்களிடம் ஒரே ஒரு விசயம் சொல்ல விரும்புகிறேன். டாஸ்மார் கடைகளை குறைப்பீர்களா? குறைக்க மாட்டீர்களா? இது நீங்க சொன்னது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது. ரூ.2000 கோடி மதிப்பிலான 3500 கிலோ கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் உங்க கட்சிக்காரரிடம். ஆனா அதில் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனக் கூறுவீர்கள்.
செந்தில் பாலாஜி தற்போது சிறையில் இருக்கிறார். அதிலும் உங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்வீர்கள். பழைய ட்வீட் எல்லாம் நீங்க எடுத்து போடுவதும், நான் பேசிய பழைய வீடியோக்களை எடுத்துப்போடுவதும் உங்க டி.என்.ஏ. ஏனென்றால் தற்போதுள்ள பிரச்னைகளை பேசுவதற்கு உங்களிடம் எதுவும் இல்லை. மக்களுக்கு என்ன செய்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று மட்டும் சொல்லுங்களேன். அதை சொல்வதற்கு தைரியம் உங்களுக்கு இல்லை. இருக்கவும் இருக்காது. ஏனென்றால் திமுகவை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.
குஷ்பு எப்பவுமே நேரடியாகதான் பேசுவாள். சுற்றிவளைத்து பேசும் பழக்கம் குஷ்புவிற்கு கிடையாது. நீங்கள் தமிழ்நாட்டு தாய்மார்களுக்கு ரூ.1000 கொடுப்பதற்கு பதில் டாஸ்மாக்கை மூடினால் அவர்கள் பல்லாயிரம் ரூபாய் சேமித்து தன்மானத்தோடு வாழ்வார்கள். இதையே நான் கூறுகிறேன். இதை திசை திருப்பிவிட்டு, மக்களை கேவளப்படுத்தும் விதமாக நான் பேசியதாக நீங்க சொல்கிறீர்கள். பெண்களை அவதூறாக பேசுவது, பெண்களை பற்றி தவறான விசயங்களை பரப்புவது திமுகவின் வழக்கம். குஷ்புவின் வழக்கம் இல்லை. இதை திமுகவில் இருந்த போதும் பார்த்திருக்கிறேன். வெளியில் வந்த போதும் பார்த்திருக்கிறேன். இப்பவும் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
என்னுடைய மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நான் சொல்லும் என்னுடைய குரு என்ன சொல்லிக்கொடுத்திருக்கிறாரோ அதை என்றும் நான் மறக்க மாட்டேன். அவரை அவமானப்படுத்தும் வகையிலும் என்றும் பேசமாட்டேன். அப்படி பேசவும் எனக்கு தெரியாது. ஆனா உங்க புதுத்தலைவருக்கு உட்பட்ட நீங்கள் இப்படியெல்லாம் பேச வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதுவும் எனக்குத்தெரியும். அதனால் உங்கள் மீது எனக்கு கோவம் கிடையாது. ஆனா பரிதாபமாக இருக்கு. நீங்க இவளோ வேலை செய்வதற்கு நாங்கள் இவ்வளவு செய்திருக்கிறோம், மத்திய அரசிடம் இருந்து இவ்வளவு நிதி வந்துள்ளது, அதை வைத்துக்கொண்டு இவ்ளோ நல்ல விசயங்களை செய்துள்ளோம், பிரதமர் மோடி இவ்ளோ விசயங்கள் எங்களுக்காக செய்து கொடுத்துள்ளார். அதனால் அந்த நல்ல திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறோம், மக்களிடம் கொண்டு சென்றிருக்கிறோம் என்பது பற்றி சொல்லுங்க. ஆனா அதை சொல்லமாட்டீங்க. ஆனால் அதை சொல்வதற்கு உண்மை சொல்வதற்கு தைரியம் வேண்டும்.
பெண்களை உயர்ந்த அந்தஸ்திற்கு கொண்டு சென்று அழகு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் திமுகவிற்கு சுத்தமாக கிடையாது. நான் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துகொண்டு இருக்கிறேன். என் மக்களுக்கு தெரியும், நான் எந்த அளவுக்கு பெண்களுக்காக போராடிக்கொண்டிருக்கிறேன், மக்களுக்காக பேசுகிறேன், தைரியமாக மக்கள் பக்கம் நிற்கிறேன் என்று அனைவருக்கும் தெரியும்.