“மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக திமுக அரசு எப்போதும் இருக்கும்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
திமுக அரசானது எப்போதும் மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக மட்டும் தான் இருக்கும் எனவும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தின் 16ம் ஆண்டு மாநில மாநாடு வைரவிழா நிகழ்ச்சி அச்சங்கத்தின் மாநில தலைவர் எம்.பி.முருகையன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வருவாய் துறையின் முக்கிய உயர் அலுவலர்கள், மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான வருவாய் துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு விருந்தினர்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
இந்து நிகழ்ச்சி மேடையில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
“முதலில் இந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு அனைவருக்கும் நன்றி. அரசு மற்றும் மக்களுக்கு பெரிதும் பக்கபலமாய் உள்ள வருவாய்த்துறையின் வைரவிழா நிகழ்ச்சிக்கு என்னுடைய வாழ்த்துகள். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு எவ்வளவோ போராட்டங்களை சந்தித்துள்ளது. ஒரு துறை எப்படி செயல்பட வேண்டும் என்று அவர் ஆட்சியில் பார்த்துள்ளோம்.
பல கடினமான சூழ்நிலையிலும், வருவாய்த்துறை பங்கு நிச்சயம் அதிகம். குறிப்பாக இலங்கை தமிழர்களுக்காக அடைக்கலம் அமைத்து தருவதிலும், பேரிடர் காலங்களிலும் இந்த துறையின் பங்கானது அரசுக்கு பெரிதும் உதவியாய் இருந்து வருகிறது. ஒரு அமைப்பாக இருந்தால் மட்டுமே குறிக்கோளை அடைய முடியும். அந்த வகையில் வருவாய்த்துறை சங்கம் வைர விழா கொண்டாடுவது அவர்களது அமைப்பின் வலுவை உயிர்த்துகிறது.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுடைய பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும் என ‘மக்களுடன் முதல்வர்’ போன்ற எண்ணற்ற திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். திமுக அரசை பொருத்தவரை அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாக இருப்பது வருவாய்த்துறை அலுவலராகிய நீங்கள் தான். ஏழை எளிய மக்கள் நலன், விவசாய நலன், குழந்தைகள் நலன், தொழிலாளர் நலன், மகளிர் நலன் போன்று எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அந்த திட்டங்களை எல்லாம் வெற்றிகரமாக செயல்படுத்த வேண்டுமானால் அதற்கு வருவாய்த்துறை ஒத்துழைப்பு இருந்தால் மட்டும்தான் செய்ய முடியும்.
இந்திய அரசிற்கே வழி காட்டுகின்ற வகையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, முதலமைச்சர் துவக்கி வைத்தார். இதன்மூலம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் சென்று சேருகிறது என்றால், அதற்கு பின்னால் வருவாய்த்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உழைப்பு உள்ளது.
அரசு அலுவலர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தால் தான் பொதுமக்களின் வாழ்க்கையில் அது எதிரொலிக்கும் என்பதில் திமுக அரசு கவனமாக உள்ளது. ஆகவே, திமுக அரசானது எப்போதும் மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பக்கபலமாக மட்டும் தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை” இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.