திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதியானது! புதுச்சேரி உள்பட காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!
திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இறுதியானது! தமிழ்நாட்டில் 9 தொகுதி மற்றும் புதுச்சேரியில் 1 தொகுதி என மொத்தம் 10 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது திமுக.
நாடாளுமன்ற தேர்தல் நெருகியுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடை இறுதி செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை திமுக தீவிரமாக மேற்கொண்டு வந்தது. அதோடு அதிமுக, பாஜக கூட்டணிக்கு முன்பாகவே தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடை திமுக படிப்படியாக இறுதி செய்து வந்தது.
இதன்படி ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மக்கள் நீதி மய்யம் என அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடை இறுதி செய்தது. இதில் மக்கள் நீதி மய்யம் மக்களவை தேர்தலில் போட்டியிடாமல் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எனவும் ஒரு மாநிலங்களவை தொகுதியை மட்டும் திமுக ஒதுக்கும் எனவும் கூட்டணி பேச்சு வார்த்தை இறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் தனது அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதி பங்கீடை இறுதி செய்த திமுக இறுதியாக இன்று இரண்டாம் கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் திமுக சார்பில் அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் வாஸ்னிக் மற்றும் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இறுதியாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் தொகுதி பங்கீடு உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்.
திமுக - காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கு.செல்வபெருந்தகையும் இன்று (9-3-2024) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், காங்கிரஸ் கட்சி, தமிழகத்தில் 9 (ஒன்பது) நாடாளுமன்றத் தொகுதிகளிலும் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியும் என மொத்தம் 10 (பத்து) தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதென முடிவு செய்யப்பட்டது.