குற்றாலத்தில் களத்தில் இறங்கி தூய்மை பணி செய்த மாவட்ட ஆட்சித் தலைவர்!
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான குற்றாலத்தில், நாளை வெகு விமர்சையாக சாரல் திருவிழா கொண்டாடப்படவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ஏற்பாடுகளை ஆய்வு செய்ய நேரில் வந்த மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் குற்றாலம் வந்தார்.
அப்போது, முக்கிய சுற்றுலாப் பகுதிகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் குப்பைகள் சிதறிக் கிடந்ததைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தார். இது குறித்து உடனிருந்த அதிகாரிகளைக் கண்டித்த அவர், உடனடியாக தூய்மைப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதிகாரிகளை கண்டித்ததோடு நின்றுவிடாமல், மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தானே களத்தில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டார். அனைத்துத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து, குற்றாலத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளும் பணியில் அவர் ஈடுபட்டார். அவரது இந்தச் செயல், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
சாரல் திருவிழாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கும் வகையில், குற்றாலத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார்.
மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சுகாதாரக் குறைபாடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கினார்.