அமைச்சரிடம் இருந்து பதில் வரும் வரை வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்! சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் பேட்டி!
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் இருந்து பதில் வரும் வரை, எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும் என சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன.
இது தொடர்பாக, ஏற்கனவே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். மேலும் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் பாதிக்கப்படக்கூடாது என கருதும் அரசு, தொழிற்சங்கத்தினரை அழைத்து பிரச்னைகளை பேசி தீர்க்க முன்வரவேண்டும் என்றும், வேலைநிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறும் எண்ணம் இல்லை என்றும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு சென்னை பல்லவன் சாலையில் உள்ள பல்லவன் இல்லத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ள போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனை அடுத்து பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகளுடனான பேச்சுவார்த்தை ஜன.7ம் தேதி தொடரும் எனவும், நிதித்துறையுடன் கலந்துபேசி அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிக்கப்படும் எனவும் கூறினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிஐடியு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன், அமைச்சரிடமிருந்து பதில் வரும் வரை எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும். பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம் நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்காக காத்திருப்போம் என்று சௌந்தரராஜன் கூறினார்.