”உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” - டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வட்டத்திற்கு உட்பட்ட பிசானத்தூரில் உயிரி மருத்துவக் கழிவு நச்சு ஆலை அமைக்கும் முடிவுக்கு எதிராக அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
நிலத்தடி நீர் பாதிப்பு, சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமல்லாது பொதுமக்களின் உயிருக்கும், உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான உயிரி மருத்துவக் கழிவு ஆலையை அமைக்கும் தமிழக அரசின் முடிவு அப்பகுதி மக்களின் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவக் கழிவு ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் புகார், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொதுமக்களின் எதிர்ப்பு, கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் எனப் பொதுமக்களின் தொடர் எதிர்ப்பையும் மீறியும் மருத்துவக் கழிவு ஆலையை அமைக்க முயற்சிப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
எனவே, பிசானத்தூர் பகுதி மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.