”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” - சீமான் வலியுறுத்தல்...!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்
”கடலூரில் ஏற்கனவே உள்ள அரசு தொழிற்பேட்டை (சிப்காட்) அருகே மீண்டும் ஒரு தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. கடலூரில் ஏற்கனவே அமைந்துள்ள வேதிப்பொருள் தொழிற்சாலைகளால் கடலூர் நகரமே வாழத் தகுதியற்ற நரகமாக மாறிவரும் கொடுஞ்சூழலில் மீண்டுமொரு தொழிற்பேட்டை அமைப்பதென்பது கடலூர் நகரையே முற்றுமுழுதாக அழிக்கவே வழிவகுக்கும். திமுக அரசு பொறுப்பேற்ற நான்காண்டு ஆட்சிக்காலத்தில் உயிர் வாழ உணவளிக்கும் வேளாண் நிலங்களை அழித்து, அதன்மீது தொழிற்சாலைகளை நிறுவும் எதேச்சதிகாரப்போக்கு அடுத்தடுத்து தொடர்வது கொடுங்கோன்மையாகும்.
கடலூரில் 2625 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரசு தொழிற்பேட்டை அருகே மேலும் 1119 ஏக்கர் பரப்பளவில் மீண்டும் ஒரு தொழிற்பேட்டை அமைக்க முடிவெடுத்துள்ளது திமுக அரசு. வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் விளைநிலங்களை அழிக்கக்கூடாது என ‘நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின்’ பிரிவு - 10 கூறும் நிலையில் அரசே அதனை மீறுவது எவ்வகையில் நியாயமாகும்? அதுமட்டுமின்றி, வேளாண் நிலங்களைப் பறிப்பதென்பது வேளாண்மையை மட்டுமின்றி, நிலத்தடி நீர், காற்று, நிலம் ஆகியவற்றை மாசுபடுத்தி, மக்களின் நலத்தையும் கெடுத்து, சுற்றுச்சூழலையும் பெருமளவு பாதிக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது வேளாண் நிலங்கள் மீது எட்டுவழிச்சாலை அமைப்பதை எதிர்ப்பதுபோல் நாடகமாடிய திமுக, ஆட்சிக்கு வந்தபிறகு அடுத்தடுத்து வேளாண் நிலங்களை அபகரித்துத் தொழிற்வளாகம் அமைக்க முயல்வது விவசாயிகளுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஏற்கனவே, கடலூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள வேதிப்பொருள் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகளால் கடலூர் முழுவதும் நிலமும், நிலத்தடி நீரும் நச்சுத்தன்மை உடையதாக மாறி நிற்கிறது. வேளாண்மை செய்ய முடியாமலும், நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாமலும் மக்கள் தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி வேதிப்பொருள் தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுப்புகையாலும், கழிவுநீர் கலந்த மாசடைந்த குடிநீராலும் கொடுநோய்களால் கடலூர் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ஏற்கனவே உள்ள தொழிற்பேட்டையையே இழுத்து மூட வேண்டுமென்று கடலூர் மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ப்போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், அதனை செய்ய மறுத்துவரும் திமுக அரசு, மீண்டுமொரு நச்சுத் தொழிற்பேட்டையை அமைக்க முயல்வது கடலூர் நகரத்தை வாழத்தகுதியற்ற பகுதியாக்கி அங்கு மக்கள் அகதிகளாக வெளியேற வேண்டியச் சூழலை ஏற்படுத்திவிடும்.
மக்களை அழித்தொழித்து அமைக்கப்படும் தொழிற்பேட்டைகள் அனைத்தும் வரலாற்றில் கொடிய கல்லறைத் தோட்டங்களாகவே மாறி நிற்கும். ஆகவே, கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்து இரண்டாவது தொழிற்பேட்டையை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டுமென வலியுறுத்துகின்றேன். இல்லையென்றால் சிப்காட் தொழிற்பேட்டையை எதிர்க்கும் கடலூர் மக்களோடு இணைந்து மாபெரும் மக்கள் திரள் போராட்டத்தை
நாம் தமிழர் கட்சி என்னுடைய தலைமையில் முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.