“சென்னையில் வெள்ளம் வருமோ என்று பதறிய காலம் மாறிவிட்டது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால், மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறிய காலம் மாறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதன் காரணமாக தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதனிடையே, இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோன்று தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் இன்று கன முதல் மிகக் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளால், மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறிய காலம் மாறிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
“சென்னையில் மழை என்றதுமே வெள்ளம் வருமோ என்று பதறும் காலம் மாறிவிட்டது. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் மேற்கொண்ட பணிகளே அதற்குக் காரணம். தூர்வாருதல், புதிதாக 876 கி.மீ.க்கு மழைநீர் வடிகால் அமைத்தது உள்ளிட்ட நமது அரசின் செயல்பாடுகளால், கனமழையின் தாக்கம் மக்களைப் பாதிக்காதவாறு தடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பெருநகர மாநகராட்சி உயர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும் களத்தில் மக்களுக்குத் துணை நின்று பணியாற்றிடவும், மக்களுக்குச் சிறு இன்னல் கூட ஏற்படாமல் தடுக்க திமுக அரசு இருக்கிறது என்ற நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திடுவோம்!”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.