#Mudumalai தனியாக சுற்றிய குட்டியானை... 26 மணி நேர போராட்டத்திற்கு பின் தாயுடன் சேர்ப்பு!
முதுமலை புலிகள் காப்பகத்தில் தனியாக சுற்றித் திரிந்த குட்டி யானையை, 26 மணிநேர போராட்டத்திற்கு பின் தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி அடுத்துள்ள
மாயாறு பகுதியில் கடந்த 11ஆம் தேதியன்று காலை குட்டியானை ஒன்று பிளறியபடி அங்கும், இங்குமாக ஓடி சுற்றி திரிந்து கொண்டிருந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் வனச்சரகர் பாலாஜி தலைமையில் வனத்துறையினர்,
வேட்டை தடுப்பு காவலர்கள் குழுக்களாக பிரிந்து குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு மேற்கொண்டதில் தாய் யானை இருப்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து 26 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குட்டியானையை தாயுடன் சேர்த்தனர். தாயை பார்த்த அந்த குட்டி யானை, தாயுடன் ஓடி சென்று பால் குடித்த காட்சி பார்ப்போரின் மனதை நெகிழச் செய்தது.
குட்டி யானையை தாயுடன் சேர்த்த வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.