'இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் நெஞ்சத்தில்....' தீவுத்திடலில் அலைகடலென திரண்ட மக்கள்...
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை காரணமாக நேற்று காலமானார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அலைகடல் என மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று காலை 9:30 மணி அளவில் உயிரிழந்ததாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத்தொடர்ந்து சாலி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. இதன் பின்னர் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடலுக்கு திரைப் பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, விஜயகாந்த் உடல் இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை தீவுத் திடலில் வைக்கப்படுவதாக தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணி அளவில் தேமுதிக அலுவலகத்திலிருந்து தீவுத் திடலுக்கு சாலை மார்க்கமாக காலை 6 மணியளவில் கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு இன்று மாலை 4:45மணிக்கு அரசு மரியாதையுடன் தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.
விஜயகாந்த்தின் உடல் நேற்று அவரது சாலிகிராமம் வீட்டிலிருந்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது, அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகத்தில் குவிந்ததால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இன்று அதிகாலை முதலே அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் பேருந்து மற்றும் ரயில் மூலம் சென்னை வந்து, விஜயகாந்த்துக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நேற்று கடும் நெரிசலுக்கு இடையே, அஞ்சலி செலுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்று காலை நேர்த்தியாக வரிசைகள் அமைக்கப்பட்டு, மக்கள் எந்த நெரிசலும் இல்லாமல் விரைவாக அஞ்சலி செலுத்திவிட்டுச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.