அரபு நாடுகளில் தெரிந்த பிறை - நாகர்கோவிலில் பக்ரீத் சிறப்பு தொழுகை!
அரபு நாடுகளில் பிறை தெரிந்ததை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அசரப் பள்ளிவாசலில் முஸ்லிம்களில் ஜாக் பிரிவினர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் எனப்படும் பக்ரீத் இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நாளில் அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளித்து, உண்டு மகிழ்வது வழக்கம்.
மேலும் இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அரபு நாட்டில் பிறை தெரிந்ததை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முஸ்லிம்களில் ஜாக் பிரிவினர் இன்று நாகர்கோவில் அஷ்ரப் பள்ளிவாசல் முன்பு உள்ள பொதுத்தெருவில் பக்ரீத் தொழுகை நடத்தினர். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பக்ரீத் பண்டிகையை ஒட்டி முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.