“பத்திரிக்கையாளர்களின் தைரியமே ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தேசிய பத்திரிக்கையாளர் தினத்தையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக இருப்பவர்கள் பத்திரிக்கையாளர்கள். பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதில் முக்கியப் பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணியினையும், சேவையையும் பாராட்டும் வகையில் தேசிய பத்திரிகையாளர் தினம் கொண்டாடப்படுகிறது.
தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தொடங்கப்பட்ட நவம்பர் 16ஆம் தேதி, தேசிய பத்திரிகையாளர் தினமாக 1996 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பத்திரிகையாளர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
இந்த பத்திரிக்கையாளர் தினத்தில் உண்மையையும், பொறுப்புக்கூறலையும் நிலைநிறுத்தும் ஊடகவியலாளர்களின் இடைவிடாத முயற்சிகளை கௌரவிக்கிறோம்.
சகிப்புத்தன்மையற்ற சகாப்தத்தில், பத்திரிகையாளர்களின் தைரியமே, ஜனநாயகத்தின் கடைசி பாதுகாப்பு அரணாக உள்ளது. அச்சம், சார்பு இன்றி பத்திரிகைத் துறை செழிக்க வேண்டும். நமது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் குரல்களைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்போம்." எனத் தெரிவித்துள்ளார்.