Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டெல்லியில் தே.ஜ.கூ. தலைவர்கள் ஆலோசனை: ஆட்சி அமைக்க உரிமை கோரி குடியரசுத் தலைவரை இன்றே சந்திக்க முடிவு!

04:56 PM Jun 05, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கிய நிலையில், ஆட்சி அமைக்க உரிமை கோர கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்றிரவே சந்தித்து உரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் INDIA கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . INDIA கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன. இதன்படி, நடந்து முடிந்த தேர்தலில், பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது.  இதனால், ஆட்சியமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாகவே பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி தங்களுடைய கூட்டணி கட்சிகளின் தலைவர்களை ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக, பீகார் முதலமைச்சர் மற்றும் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.

இதேபோன்று முன்னாள் துணை முதலமைச்சர் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வி யாதவ், இந்தியா கூட்டணி சார்பிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று புறப்பட்டு சென்றார். இதில், நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இருவரும் ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். அப்போது, ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். பாஜக பெரும்பான்மையை பெற தவறிய நிலையில் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகிய இருவரும் மத்தியில் ஆட்சியமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவராக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் துவங்கியது. இதில், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார்,  தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு , லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் மற்றும் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங்,  அமித் ஷா, பாஜக தலைவர் நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.  புதிய ஆட்சி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.  மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவும்,  நிதிஷ்குமார் எந்த நிர்பந்தமும் விதிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்தகட்டமாக தான் அமைச்சரவை குறித்து விவாதிக்கப்படுவதாகவும், தற்போது அமைச்சரவை குறித்தோ, சபாநாயகர் பதவி குறித்தோ எந்த நிர்பந்தமும் வைக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நாளை ஆட்சி அமைக்க உரிமை கோருவதாக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  மேலும்,  இன்றிரவே குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Tags :
Elections With News7TamilElections2024Loksabha Elections 2024ndaNDA allianceNews7Tamilnews7TamilUpdatespm narendra modiPMO India
Advertisement
Next Article