“தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் திமுகவின் இன்னொரு நாடகம்” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ!
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
“திமுக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இந்தியா கூட்டணி அனைத்தும் இணைந்து நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலே போதுமானது. திமுக தங்களது ஆட்சியின் தவறுகளை மறைப்பதற்காக, தமிழ்நாட்டு மக்களை திசை திருப்புவதற்காக நடத்தும் நாடகம் தான் இத்தகைய மொழி பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறது.
மத்திய அரசு இன்னும் உறுதியாக கூறாத நிலையில், உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டிற்கு எந்த குறையும் இருக்காது என்று கூறி இருக்கிறார். அவர் மீது நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் கூட, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே நாடாளுமன்றத்தின் முன்பு போராட்டம் நடத்துகிறார்கள். அவர்கள் கூட்டணியில் அங்கம் வைக்கும் இந்தியா கூட்டணி கட்சிகள் எதுவும் பங்கேற்கவில்லை.
திமுக தமிழுக்காக பெரிதாக தொன்று ஆற்றவில்லை. அதிமுக காலத்தில் தான் தமிழுக்கு உலக அங்கீகாரம் பெற வழி வகுத்தோம். திருவள்ளுவர் சிலைக்கு அடிக்கல் நாட்டியதே அதிமுக ஆட்சியில் தான். காவேரி மேகதாது விவகாரங்களில் அண்டை மாநிலங்கள் ஒத்துவரவில்லை. 15 மரங்களை வெட்ட முடியவில்லை; கேரளா முதலமைச்சரிடம் நெருக்கமாக இருக்கிறீர்கள். அவரைப் பார்த்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கூட அதைப்பற்றி பேசவில்லை. இதையெல்லாம் திமுக அரசு செய்யவில்லை, சும்மா வேடம் போடுகிறார்கள்.
எல்லோரையும் எல்லா காலத்திலும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று நடக்கக்கூடிய கூட்டம் திமுகவின் இன்னொரு நாடகம்”. என தெரிவித்தார்.