Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கலை வடிவமைப்பின் ‘தளபதி’ தோட்டா தரணி....!

08:52 AM Dec 16, 2023 IST | Jeni
Advertisement

கலைவடிவமான சினிமா, கலை இயக்குநர்களின் பங்கு இல்லாமல் முழுமை பெறாது. 62 ஆண்டுகளாக கலை வடிவமைப்பில் தன்னை ஈடுபடுத்தி இந்திய அளவில் தவிர்க்க முடியாத கலை இயக்குநராக விளங்குகிறார் தோட்டா தரணி. அவர் குறித்த செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

“ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லே...” இந்த பாடல் வரிகளுக்கு பொருத்தமானவர் கலை இயக்குநர் தோட்டா தரணி. இந்த பாடல் இடம்பெற்ற அபூர்வ சகோதரர்கள் படத்தின் கலை இயக்குநரும் அவரே. கமலின் நடிப்பு படத்திற்கு எந்த அளவிற்கு உயிர் கொடுத்ததோ, அதற்கு சற்றும் சளைத்ததல்ல செட் அமைத்துக் கொடுத்த தோட்டா தரணியின் கைவண்ணம்.

ஒரு திரைப்படத்தின் காட்சிகள் எப்படி, எந்த சூழலில் காட்சிப்படுத்த வேண்டுமென இயக்குநர் எண்ணுகிறாரோ, அதனை அப்படியே கண்முன் நிறுத்தும் பணி எளிதானது அல்ல. ஆனால் அந்த வித்தை தோட்டா தரணிக்கு கை வந்த கலை. தோட்டா தரணியின் தந்தை தோட்டா வெங்கடேஸ்வர ராவும் ஒரு கலை இயக்குநர். தனது தந்தைக்கு உதவியாளராக 12 வயதில் தொடங்கிய தோட்டா தரணியின் பயணம் இன்று 74வது வயதிலும் தொய்வில்லாமல் தொடர்கிறது.

மும்பை முதல் அமெரிக்கா வரையிலான உலகின் பல பகுதிகளை, சென்னையிலேயே உருவாக்கி, ரசிகர்களை திருப்திப்படுத்தி வெற்றி கண்டவர் தோட்டா தரணி. நாயகன் படத்தில் வரும் மும்பை தாராவி பகுதி, காதலர் தினம் படத்தில் வரும் மும்பை நெட் செண்டர், ஜீன்ஸ் திரைப்படத்தின் சில அமெரிக்க காட்சிகள் உள்ளிட்டவை சென்னையில் செட் அமைத்து எடுக்கப்பட்டவை என்றால், நம்புவதற்கு கடினமாகத்தான் இருக்கும். அந்த நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது தோட்டா தரணியின் கலை இயக்கம்.

சிவாஜி படத்தின் பாடல்களின் மூலம் காதுகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் விருந்து படைத்தார் என்றால், காட்சிகளில் பிரமாண்டப்படுத்தியவர் தோட்டா தரணி.  “சஹானா சாரல் தூவுதோ” பாடலில் அவர் அமைத்த கண்ணாடி மாளிகை அமேசிங் ரகம்,  “அதிரடிக்காரன் மச்சான்” பாடல் செட் அல்டிமேட் ரகம். ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் - தோட்டா தரணி கூட்டணியில் ‘திருடா திருடா’ படத்தின் வீரபாண்டிக்கோட்டையிலே பாடலும், கொஞ்சம் நிலவு பாடலும் இசைக்காகவும், பிரமாண்ட செட்டிற்காகவுகம் இன்றளவும் ரசிக்கப்படுபவை.

காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணாடி பேருந்து, இந்தியன் படத்தில் இடம்பெற்ற விமான நிலைய கிளைமாக்ஸ் காட்சி, சந்திரமுகி அரண்மனை, பொன்னியின் செல்வன் சோழ மண்டலம் என ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்த பல வித்தைகளை திரையில் நிகழ்த்திக் காட்டியவர் கலை இயக்குநர் தோட்டா தரணி. இப்படி அவர் நிகழ்த்திய திரைப்பட அற்புதங்களின் பட்டியல் மிக நீண்டது.

சினிமா பார்க்கும் ரசிகனுக்கு படத்தில் இந்த காட்சியில் செட் அமைத்திருக்கிறார்கள் என்கிற எண்ணம் வரக்கூடாது. கதையின் ஓட்டத்தில் அவை கலந்து விட வேண்டும் என தோட்டா தரணி ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். அதில்தான் அவருடைய வெற்றி அடங்கியிருக்கிறது....

Tags :
ArtDirectorBirthdaycinemamovieThottaTharani
Advertisement
Next Article