ட்ரம்ப், ஜெலன்ஸ்கி இடையே நிலவும் பனிப்போர் - கொண்டாடும் ரஷ்யா!
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 2022 பிப்., 24-ல் போர் தொடங்கியது. போர் தொடங்கி மூன்றாண்டுகள் ஆன நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டி வருகிறார்.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததில் இருந்தே ஜோ பைடன் அரசு பொருளாதார உதவிகளை உக்ரைனுக்கு வழங்கி வந்தது. ஆனால் ட்ரம்ப் அதிபராக பதவியேற்றதில் இருந்து உக்ரைனுக்கு வழங்கி வந்த பொருளாதார உதவிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அமெரிக்க அளித்த பொருளாதார உதவிக்கு கைம்மாறாக, உக்ரைன் நாட்டின் அரிய வகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு காலவரையறை இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இதற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தங்கள் நாட்டுக்கு அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிடத் தயார் என்று அறிவித்தார். ஆனால், உக்ரைனுக்கு இனியும் பாதுகாப்பு அளிக்க இயலாது என ட்ரம்ப் தெரிவித்தார்.
இச்சூழலில் பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்காவிற்கு நேற்று சென்ற அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப்பை சந்தித்துப் பேசினார். உக்ரைன் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தந்தால் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறேன் என்று ஸெலென்ஸ்கி வலியுறுத்தவே, ட்ரம்ப் மறுத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து அதிபர் ஜெலன்ஸ்கி, ட்ரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசியவை அமெரிக்க செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களில் வெளியிடப்பட்டது. இதில், ஜெலன்ஸ்கி மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுப்பதாகவும், மக்களின் உயிர்களோடு விளையாடுவதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ட்ரம்பையும், அமெரிக்க அரசையும் ஜெலன்ஸ்கி அவமரியாதை செய்ததாக ஜே.டி.வான்ஸ் குற்றம் சாட்டினார்.
விவாதம் முற்றவே ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அமெரிக்கா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்ட இந்த மனக்கசப்பை ரஷ்யா ரசித்து வருகிறது. ஜெலென்ஸ்கிக்கு இது ஒரு ‘திடமான அறை’ என்று ரஷ்யாவின் முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,
“நடந்தது மிகவும் நல்ல விஷயம். முதன் முதலில் ஜெலன்ஸ்கியின் முகத்துக்கு நேராக டிரம்ப் உண்மையை போட்டுடைத்து விட்டார். நன்றியில்லாத நபரின் கன்னத்தில் அறையப்பட்டிருக்கிறது, ஆனால் இது போதாது. உக்ரைனுக்கு அமெரிக்காவின் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகெங்கிலும் உள்ள செய்தி சேனல்களில் ஒளிபரப்பான வாக்குவாதத்தின் போது டிரம்பும், வான்ஸும் ஜெலென்ஸ்கியைத் தாக்காமல் தங்களை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது ஒரு அதிசயம் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா தெரிவித்தார். சோறிட்ட கையை ஜெலன்ஸ்கி கடித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.