எஸ்.ராமகிருஷ்ணனின் "மாஸ்கோவின் மணியோசை" - நூல் அறிமுகம்
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனன் எழுதி புத்தக கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புதிய வரவான “மாஸ்கோவின் மணியோசை” புத்தக அறிமுகம் குறித்து காணலாம்.
சமகால தமிழ் எழுத்துலகில் தவிர்க்க முடியாத எழுத்தாளாராக வலம் வருபவர் எஸ்.ராமகிருஷ்ணன். தமிழ் சூழலில் கால் நூற்றாண்டுக்கு மேலாக ரஷ்ய இலக்கியங்கள் குறித்து பேசியும் எழுதியும் வந்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். பள்ளிப் பருவத்திலேயே அவர் வாசித்த புத்தகங்களும், ரஷ்ய இலக்கியங்களும்தான் அவரது எழுத்திற்கான அச்சாரம் என எஸ்.ரா. பல மேடைகளில் பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களும் , யூடியூப் சேனல்களும் வந்த பின்னர் எஸ்.ராமகிருஷ்ணனின் உரையாடல்களும், உரைகளும் நவீன கால வாசகர்களுக்கு எஸ்.ராவை புதிய கோணத்தில் அறிமுக செய்தது. வெறுமனே எழுத்துக்கள் மற்றும் புத்தகங்களோடு அவர் தனது இலக்கியப் பயணத்தை நிறுத்திடவில்லை. நவீன தொழில்நுட்பங்களின் வாயிலாக வாசகர்களிடம் சென்றடைவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டார். எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம், பதின், இடக்கை போன்ற நாவல்கள் தமிழ் எழுத்துலகில் தவிர்க்க முடியாத ஒன்று.
அதேபோல ரஷ்ய இலக்கியங்கள் குறித்தும், உலக சினிமாக்கள் குறித்தும் தொடர்ச்சியாக அவர் எழுதி வருகிறார். அவரின் இலக்கற்ற பயணிகள், சாமுராய்கள் காத்திருக்கிறார்கள் போன்ற நூல்கள் பிரபலமாக அறியப்பட்ட ஒன்று. நன்றாக எழுதுபவர்களால் சிறப்பாக பேச முடியாது, சிறப்பாக பேசுபவர்களுக்கு எழுத்துக்கள் அவ்வளவு இலகுவாக பிடிபடாது என்கிற வழக்குச் சொல் உண்டு. ஆனால் அதற்கு நேர் எதிராய் இருப்பவர் எஸ்.ரா. என்றால் அது மிகையல்ல.
எஸ்ராவால் சிறந்த எழுத்துக்களையும், சிறந்த சொற்பொழிவுகளையும் ஒன்றாக தர முடியும். அதன் விளைவாக எஸ்.ராமகிருஷ்ணன் ரஷ்ய எழுத்தாளார்களான டால்ஸ்டாய், ஆண்டன் செகாவ், துர்கணேவ் போன்றவர்கள் குறித்து அவர் ஆற்றிய உரைகள் மிகவும் பிரபலமானவை.
அந்த வகையில் இந்த புத்தக திருவிழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 6 புத்தகங்கள் புதிய வரவாக இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்றுதான் மாஸ்கோவின் மணியோசை.
மாஸ்கோவின் மணியோசை
தொடர்ச்சியாக ரஷ்ய இலக்கியங்களை வாசித்ததன் விளைவாக புகழ்பெற்ற அல்லது ரஷ்யாவின் மிக முக்கியமான 30 எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் விதமாக மாஸ்கோவின் மணியோசை புத்தகத்தை எழுத்தாளர் எஸ்.ரா எழுதியுள்ளார். புகழ் பெற்ற ரஷ்ய எழுத்தாளர்களான் டால்ஸ்டாய், தஸ்தவஸ்கி, ஆண்டன் செகாவ் , கார்கே, துர்கணேவ் உள்ளிட்ட எழுத்தாளர்கள் தொடங்கி சமகால எழுத்தாளர்களை வரையிலான அறிமுகம் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய எழுத்தாளர்களின் பின்னணி , அவர்கள் எழுதிய காலச் சூழல், அவர் ஏன் இத்தனை அளவுக்கு கொண்டாடப்பட்டார், அவரை ஏன் வாசிக்க வேண்டும் என இப்புத்தக்கத்தில் மிக விரிவாக எழுதியிருக்கிறார் எஸ்.ரா. ரஷ்ய இலக்கியங்கள் குறித்தும் ரஷ்ய எழுத்தாளர்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பக் கூடிய வாசகர்களுக்கு இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும். மாஸ்கோவின் மணியோசை புத்தகம் தேசாந்திரி பதிப்பகத்தின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
-ச.அகமது, நியூஸ் 7 தமிழ்