கொடியேற்றத்துடன் தொடங்கியது சட்டைநாதர் கோயில் சித்திரை பெருவிழா!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரப்பாடல் பெற்ற ஸ்ரீ சட்டைநாதர்
கோயில் அமைந்துள்ளது. இங்கு திருநிலை நாயகி அம்பாள் உடன் பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். காசிக்கு அடுத்தபடியாக அஷ்ட பைரவர்கள் தனி சன்னிதியில் அருள் பாலிக்கின்றனர். இந்த கோயிலில் சிவபெருமான் ஸ்ரீ பிரமபுரீசுவரர், ஸ்ரீ தோணியப்பர் மற்றும் ஸ்ரீ சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோயிலில் அஷ்ட பைரவர்கள் ஒரே சன்னதியில் எழுந்தருளியுள்ளனர். இங்குள்ள பிரம்ம தீர்த்தக்கரையில் திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் ஊட்டியதனை நினைவு கூறும் வகையில் ஒவ்வொறு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவ விழாவில் 2ம் நாள் திருமுலைப்பால் விழா நடைபெறும்.
இந்நிலையில் சிறப்பு வாய்ந்த சித்திரை பிரமோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் மண்டபத்தில் அஸ்திர தேவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், முத்துச்சட்டைநாதர், ஸ்ரீ திருநிலை நாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீ பிரமபுரீசுவரர் பல்லக்கில் வந்து மண்டபத்தில் எழுந்தருள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
அதனையடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட ரிஷபக்கொடி, ஓதுவார்கள் தேவாரம், பதிகம் பாடிட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கிட உற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்துக்கு மகாதீபாராதனை ஸ்ரீமத் சட்டநாதன் தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது