விமானத்தில் அழுத குழந்தை… கழிவறையில் வைத்து பூட்டிய பெண்கள் | #China-வில் அரங்கேறிய கொடூரம்!
சீனாவில் 3 வயது சிறுமியை விமானத்தின் கழிவறையில் வைத்து பூட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆக.24-ம் தேதியன்று சீனாவின் உள்நாட்டு விமானத்தில் நடைபெற்ற ஒரு கொடூர சம்பவம் தற்போது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. தெற்கு சீன நகரமான குய்யாங்கிலிருந்து, ஷாங்காய் சென்ற விமானத்தில் 3 வயதுடைய சிறுமி தனது தாத்தா, பாட்டியுடன் பயணம் செய்துள்ளார்.
பயணத்தின்போது, அந்த சிறுகுழந்தை அழுக ஆரம்பித்துள்ளது. குழந்தையின் அழுகை சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவ்விமானத்தில் பயணம் செய்த, குழந்தைக்கு தொடர்பே இல்லாத இரு பெண்கள் குழந்தையை பாட்டியிடமிருந்து கூட்டிச் சென்று, அந்த சிறுபிள்ளையை விமானத்தின் கழிவறையில் வைத்து பூட்டியுள்ளனர்.
இருவரில் ஒருவரான கோ டிங்டிங் என்ற பெண் இதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஈவு, இறக்கமற்ற இந்த பெண்களின் செயலுக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். பலர் இவர்கள் இருவரும் இதயமற்றவர்கள் என வஞ்சித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில், நீ மீண்டும் சத்தம் போட்டால் உன்னை இங்கேயே தனியாக விட்டு சென்று விடுவோம்’ என ஒருவர் கூறுகிறார். மேலும் அந்த பதிவில் பயணிகள் பலர் சத்தம் கேட்காமல் இருக்க தங்கள் காதுகளை பொற்றிக் கொண்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சிறுமிக்கு பாடம் கற்பிக்கவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர்.
பொது இடங்களில் சிறு குழந்தைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து சீனாவில் நீண்டகாலமாக விவாதம் நடந்து வருகிறது. சில குழந்தைகள் பெரும்பாலும் பொது இடங்களில் கத்துகிறார்கள் அல்லது உடமைகளை சேதப்படுத்துகிறார்கள் என்று சிலர் மடத்தனமாக நம்புகின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, சீனாவில் சில ரயில்களில் குழந்தைகளுக்காக தனி பெட்டிகளும் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் அழுகை என்பது சிறுகுழந்தையின் இயல்பே என்பதை அறியாத அந்த இரு பெண்களையும் என்ன சொல்வதென தெரியவில்லை.