“சாதி, குலத்தொழில் முறையை மீண்டும் கொண்டுவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது” - கனிமொழி எம்பி!
சாதி அமைப்பையும், குலத்தொழில் முறையையும் மீண்டும் கொண்டுவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், சாதி அடிப்படையிலான தொழில் முறையை வலுப்படுத்துவதாகவும், தற்போதைய வடிவில் அதனை செயல்படுத்திட இயலாது என்றும், சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் விரிவான திட்டம் ஒன்றினை உருவாக்கிட தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு அரசு வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியில் மத்திய அரசின் திட்டத்தை எதிர்ப்பதாக பலரும் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து விஸ்வகர்மா திட்டத்தை அதன் வடிவிலேயே தமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது ஏன் என கனிமொழி என்.வி.என்.சோமு எம்பி விளக்கம் அளித்தார். இந்நிலையில் சாதி அமைப்பையும், குலத்தொழில் முறையையும் மீண்டும் கொண்டுவரும் விஸ்வகர்மா திட்டத்தை ஏற்க முடியாது என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் குறித்து, கனிமொழி எம்பி கூறியதாவது;
திமுக விஸ்வகர்மா திட்டத்தை முழுமையாக நிராகரித்துவிட்டது. தமிழ்நாட்டின் முதலமைச்சர், திமுகவின் தலைவர் முக. ஸ்டாலின் விஸ்வகர்மா திட்டத்தை தீவிரமாக எதிர்ப்பதன் காரணத்தை ஏற்கனவே மிகத் தெளிவாக கூறியுள்ளார். எனது நிலைப்பாடும் அதுதான். சாதி அமைப்பையும், பெற்றோர்களின் தொழிலையே குழந்தைகள் ஏற்க வேண்டும் எனும் குலத்தொழில் முறையையும் அத்திட்டம் இங்கு மீண்டும் கொண்டு வருகிறது. அதை நாங்கள் ஏற்கமுடியாது” என தெரிவித்தார்.