அமெரிக்க பத்திரிக்கையை எட்டிய முதலமைச்சரின் முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் ‘சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு’ நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு கடந்த மாதம் மூன்று நாட்கள் நடைபெற்றது. அந்த கருத்தரங்கை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அதில், சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை கண்டறியும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும் என்றும் கல்வெட்டு ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்றும் கூறினார். மேலும் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த பரிசுத்தொகை பற்றி பிரபல அமெரிக்க ஆங்கில பத்திரிக்கையான ‘தி நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ஆரிய இனம்தான் உண்மையான இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று இந்து தேசியவாதிகள் வாதாடி வருவது பாஜகவினாரால் ஊக்குவிக்கப்பட்ட இந்து மேலாதிக்கக் கொள்கை” என்று குறிப்பிட்டதோடு இந்த கருத்துக்கு திமுக உட்பட பல கட்சிகள், “தென்னிந்தியாவின் திராவிடர்கள்தான் நாட்டின் பூர்வீக மக்கள். வட இந்தியாவின் ஆரியர்கள் ஐரோப்பாவிலிருந்து வந்த படையெடுத்தவர்” என வேறுபட்ட கருத்தை கூறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில், சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை புரிந்துகொள்வதுதான் இந்த வாதங்களுக்கு தீர்வாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.