கர்நாடக மாநிலத்தில் வெடித்த முதலமைச்சர் நாற்காலி சர்ச்சை - கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக சித்தராமையா அறிவிப்பு!
கர்நாடக மாநிலத்தில் வெடித்த முதலமைச்சர் நாற்காலி சர்ச்சையைத் தொடர்ந்து கட்சி மேலிட முடிவுக்கு கட்டுப்படுவதாக தற்போதைய முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்து வருகிறது. காங்கிரஸ் வெற்றி பெற்ற உடனேயே முதலமைச்சர் பதவி யாருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சி மேலிடம் சித்தராமையாவை முதலமைச்சராகவும், காங்கிரஸ் மாநிலத் தலைவரான டி.கே.சிவக்குமாருக்கு துணை முதலமைச்சர் பதவியும் வழங்கியது.
தற்போது கர்நாடாக அரசியல் முதலமைச்சர் நாற்காலிக்கு மீண்டும் சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. சமீபத்தில் வொக்கலிகா சமூகத்தின் தலைவர் கெம்பேகவுடாவின் பிறந்தநாளை கொண்டாடும் நிகழ்வில், வொக்கலிகா சீர் சந்திரசேகரநாத சுவாமி, டி.கே. சிவகுமாரை முதல்வராக்க சித்தராமையா வழி செய்ய வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
“கர்நாடக தேர்தலுக்கு பின்னர் எங்கள் டி.கே. சிவகுமார் முதலமைச்சர் ஆகவில்லை. அனுபவம் வாய்ந்த சித்தராமையா எதிர்காலத்தில் நமது சிவகுமாருக்கு ஆட்சியை விட்டுக்கொடுத்து அவரை ஆசிர்வதிக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். சித்தராமையா மனது வைத்தால் மட்டுமே இது நடக்கும்” என்று கூறினார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் முதலமைச்சர் மாற்றம் குறித்து கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..
” முதலமைச்சர் மாற்றம் குறித்து விஸ்வ ஒக்கலிகா மகாசமஸ்தானா மடத்தின் சந்திரசேகரநாத சுவாமிகள் தெரிவித்திருந்த கருத்துகள் பொது வெளியில் விவாதிக்கக் கூடியதல்ல. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானது. கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்பேன். சுவாமிகள் என்ன கூறினார் என்பது குறித்து கருத்துக் கூற நான் விரும்பவில்லை. எங்களது கட்சி தேசிய கட்சி. எங்களுக்கு கட்சி மேலிடம் உள்ளது ” என சித்தராமையா தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் கூறியதாவது..
” முதலமைச்சர் மாற்றம், கூடுதலாக துணை முதல்வர்களை நியமிப்பது குறித்து கட்சித் தலைவர்கள் யாரும் பேசக் கூடாது. யாராவது பேசினால், கடும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். அப்படி பேசுவோருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் ” என கடுமையாக எச்சரித்துள்ளார்.