"அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது" - இபிஎஸ் பேட்டி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி இருவரும் காரசார வாதங்களை முன்வைத்தனர். "திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் நீட் கொண்டுவரப்பட்டது. பிள்ளையார் சுழி போட்டது நீங்கள்தான்" என்று முதலமைச்சரை நோக்கி தலைவர் பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதற்கு "நீட் சிக்கலை போக்க அதிமுகவுக்கு இப்போதும் வாய்ப்பு உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால்தான் பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம் என சொல்லுமா அதிமுக?" என்று எடப்பாடி பழனிசாமியை நோக்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"2010 டிசம்பரில்தால் நீட் தேர்வுக்கான ஆரம்பப் புள்ளி தொடங்கியது. திமுக-காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய அதிமுக போராடியது. நீட் தேர்வு பற்றி பலமுறை விளக்கம் கொடுத்துவிட்டேன். திருவிழாவில் மோர் உள்ளிட்டவை குடித்ததால்தான் மக்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என அமைச்சர் கூறுவதை ஏற்க முடியாது. சித்திரை திருவிழாவிற்கு உறையூர் பகுதி மக்கள் மட்டும்தான் சென்றார்களா?
உறையூர் பகுதி மக்களுக்கு மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது ஏன்? திமுக-பாஜக கூட்டணி சேர்ந்தபோது நாங்கள் கூட்டணி சேர்வதில் மட்டும் என்ன தவறு? அதிமுக யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கும். நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து முதலமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. அதனால்தான் இப்படி பேசுகிறார். முதலமைச்சர் பதற்றப்படுவதை சட்டப்பேரவையில் நேருக்கு நேர் பார்த்தேன்"
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.