“வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சருக்கு மனமில்லை” - அன்புமணி ராமதாஸ்!
சேலத்தில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது;
“தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுகின்றனர்; அவர்களின் இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை; வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான். மேட்டூர் அணை உபரிநீரை வசிஷ்ட நதியுடன் இணைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்.
தமிழகத்தில் இனிவரும் காலங்களில் கூட்டணி கட்சிகள்தான் ஆட்சி அமைக்கும்; தனியாக யாரும் ஆட்சிக்கு வர முடியாது. வன்னியர்கள் முன்னேற கூடாது என்பதற்காகவே உள் இடஒதுக்கீடு வழங்க முதலமைச்சருக்கு மனமில்லை. வன்னியர்களை வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்க்கிறார்.
வரும் தேர்தலில் இதன் விளைவு தெரியும். வீரபாண்டியார் இப்போது இருந்திருந்தால் நமக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு கிடைத்திருக்கும். முதலமைச்சரிடம் சண்டை போட்டாவது அவர் வன்னியர்களுக்கான உள் இடஒதுக்கீட்டை பெற்று தந்திருப்பார்” என தெரிவித்தார்.