”தலைமைத் தேர்தல் ஆணையரின் ஊடகச் சந்திப்பு கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது”- முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடந்த 7 ஆம் தேதி டெல்லியில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். அதில், அவர், கடந்த மக்களவைத் தோ்தலில் ஆளும் பாஜக அரசு தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் ‘வாக்குத் திருட்டில்’ ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டினர். அத்துடன் கர்நாடக வாக்காளர் பட்டியலில் முறைகேடு தொடர்பாக சில‘ஆதாரங்களையும்’ அவர், வெளியிட்டாா்.
இந்த இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று பிற்பகலில் டெல்லியில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ராகுல் காந்தி மற்றும் எதிர்கட்சிகளின் குற்றாச்சாட்டுகளை மறுத்தார். மேலும் அவர், குற்றச்சாட்டுகள் குறித்து 7 நாள்களுக்கு ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது தேசத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பை விமர்சித்து 7 கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “இந்தியா கூட்டணியினர் எழுப்பிய கேள்விகளுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, கூடுதலான கேள்விகளை எழுப்பியிருக்கிறது தலைமைத் தேர்தல் ஆணையரது ஊடகச் சந்திப்பு.
பின்வரும் கேள்விகள் எழுகின்றன:
1.வீடுதோறும் கணக்கெடுப்பு நடத்தியும், எப்படி இத்தனை தகுதியான வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்?
2.புதிய வாக்காளர்களின் பதிவு வழக்கத்திற்கு மாறாகக் குறைவாக உள்ளது. இந்த இளம் வாக்காளர்கள் கணக்கெடுக்கப்பட்டனரா? தகுதிக்குரிய நாளில் 18 வயது நிறைவுற்ற எத்தனை இளம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர் என்பதைச் சொல்லும் தரவுகள் ஏதேனும் இருக்கிறதா?
3.Registration of Electors Rules, 1960-இன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள விசாரணை மற்றும் இரண்டு முறையீடு நடைமுறைக்கான காலவரையறை, எதிர்வரும் பீகார் மாநிலத் தேர்தலில் பெருமளவிலான வாக்காளர்களை விலக்கும் வாய்ப்புள்ளது. இவ்விவகாரத்தைத் தேர்தல் ஆணையம் எவ்வாறு தீர்க்கப் போகிறது?
4.பிற மாநிலங்களில் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) மேற்கொள்ளப்படும்போது, இந்த நடைமுறைச் சிக்கல்களைத் தேர்தல் ஆணையம் கணக்கில்கொள்ளுமா?
5.01/05/2025 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, மறைந்த வாக்காளர்களின் பெயரை நீக்குமாறு 17/07/2025 அன்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். இது எப்போது நிறைவேற்றப்படும்?
6.வாக்காளரின் உரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக ஆதாரை ஏற்கத் தேர்தல் ஆணையத்தைத் தடுப்பது எது?
7.“நியாயமான தேர்தல்கள்” என்பதே தேர்தல் ஆணையத்தின் இலக்காக இருக்குமானால், அது மேலும் வெளிப்படைத்தன்மையுடனும் - வாக்காளர்களுக்கு நெருக்கமாகவும் இருக்கலாமே?” ஆகிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.