"மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது!" - மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிக்கையால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா விமர்சித்துள்ளார்.
மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
"கல்விக்கும், மருத்துவத்திற்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது. பட்டியலின, பழங்குடி மற்றும் சிறுபான்மை மக்களுக்கான நிதி, இந்த நிதி அறிக்கையில் குறைக்கப்பட்டுள்ளது.
பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீடு ரூ.9,409 கோடியிலிருந்து ரூ.6,780 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களுக்கான ஒதுக்கீடு ரூ 4,295 கோடியிலிருந்து ரூ.3,286 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கான நிதி ரூ.610 கோடியிலிருந்து ரூ.555 கோடியாகக் குறைந்து உள்ளது. வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு போன்ற அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க எந்தவொரு திட்டங்களையும் தீட்டாமல், காங்கிரஸ் அரசாங்கம் கொண்டு வந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை விமர்சித்த பாஜக, இன்று அதற்கு ரூ.88,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதையும் படியுங்கள்: ஞானவாபி மசூதி வளாகத்தில் பூஜை நடத்த அனுமதியளித்ததை எதிர்த்து மேல்முறையீடு!
ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற மக்களுக்கு உதவிடும் திட்டத்தை 10 ஆண்டுகள் ஆட்சி செய்தும் பாஜக-வால் கொண்டு வர முடியாதது அவர்களது இயலாமையைக் காட்டுகிறது. உட்கட்டமைப்பு, கிராம வளர்ச்சி, புதிய வறுமை ஒழிப்புத் திட்டங்கள் போன்ற எந்த ஒரு புதிய திட்டமும் இல்லை. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பை எதிர்நோக்கிய நாட்டு மக்களுக்கு, இந்த வரவு, செலவு அறிக்கையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது."
இவ்வாறு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.