Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும்” - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மத்திய அரசின் பங்குத்தொகை தொடர்பாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
04:26 PM Feb 18, 2025 IST | Web Editor
மத்திய அரசின் பங்குத்தொகை தொடர்பாக மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Advertisement

தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, மத்திய அரசு தனது பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவித்திட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவிக்கு இன்று (18-2-2025) கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

அக்கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளதாவது,

"மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரின் 31-01-2025 ஆம் நாளிட்ட கடிதத்தில், திறன்மிகு குழந்தைகள் மையம், மகளிர் சக்தி இயக்கம்  மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சேவைகள் திட்டம் போன்ற மத்திய அரசின் நிதியுதவித் திட்டங்களுக்கு. 29-1-2025ஆம் நாள் நிலவரப்படி ரூ.715.05 கோடி செலவழிக்கப்படாமல் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து நலத் திட்டங்களும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்களிப்பு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முறையாக வழங்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான நேர்வுகளில், மத்திய அரசின் நிதிப்பங்கு காலாண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிலோ மட்டுமே வழங்கப்படுகிறது. நிதியாண்டின் முடிவிற்குள் மத்திய அரசு ஒதுக்கும் தொகையை மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்குக் குறுகிய காலத்திற்குள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்னும் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள 304 கோடி ரூபாயில், மத்திய அரசின் பங்குத் தொகையான 184 கோடி ரூபாய் இதுநாள் வரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் உரிய காலத்தில் வரவு வைக்க இயலாமல் உள்ளது.

இன்றைய தேதியில், ஒற்றை ஒருங்கிணைப்பு முகமை கணக்குகளில் உள்ள 576.22 கோடி ரூபாயில், இந்த நிதியாண்டு முடிவதற்குள் ரூ.482.80 கோடி பயன்படுத்தப்படும், மீதமுள்ள தொகை மத்திய அரசின் பங்காக அடுத்த நிதியாண்டுக்குக் கொண்டு செல்லப்படும்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திட ஏதுவாக, மத்திய அரசின் திட்டங்களுக்கான பங்குத் தொகையை, குறிப்பிட்ட காலத்திற்குள் அதாவது அந்தந்த நிதியாண்டுக்குள்ளேயே விடுவித்திட வேண்டுமென்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Next Article