மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மனு அளிக்கப்பட்டதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சேதமடைந்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (டிச.26) நேரில் ஆய்வு செய்தார். வெள்ள நிவாரண பணிகளுக்கு போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி நிர்மலா சீதாராமனிடம் தமிழ்நாடு அரசு சார்பில் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
”தமிழ்நாடு கடந்த அரை நூற்றாண்டில் மட்டும் 50 புயல்களை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையை கொண்ட தமிழ்நாடு, இயற்கையின் தொடர் அச்சுறுத்தல்களை சந்தித்து வருகிறது. மிக்ஜாம் புயலுக்கு அடுத்து, தென் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையானது மேலும் துயரங்களைச் சேர்த்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தென் மாவாட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோர் எடுத்துரைத்தனர்.
அதுமட்டுமின்றி வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதராமனிடம், நிவாரண நிதியின் அவசியத்தை வலியுறுத்தி 72 பக்கங்கள் கொண்ட மனுவையும் அளித்துள்ளனர். மாநில பேரிடர் நிவாரண நிதி போதுமான அளவு இல்லாததால், மத்திய அரசு போதுமான நிவாரண நிதியை வழங்கிட வேண்டும்."
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.