“மத்திய அரசு தங்களுடைய ஏஜென்ட்டை வைத்து திசை திருப்புகிறது” - அமலாக்கத்துறை ரெய்டு குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
சட்ட விரோத பண பரிவர்த்தனை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோருடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் சென்னையில் எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இதில் சில இடங்களில் முக்கிய அவணங்களை அமலாக்கத்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் அமலாக்கத்துறை மத்திய அரசின் ஏஜெண்டாக செயல்படுகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் அமலாக்கத்துறையினர் நடத்தி வரும் சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “மும்மொழிக் கொள்கை, நிதி பகிர்வு, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவைகளில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எதிர்த்து குரல் கொடுப்பதால் மத்திய அரசு தங்களுடைய ஏஜென்ட்டான அமலாக்கத்துறையை வைத்து திசை திருப்ப சோதனை நடைபெற்று வருகிறது.
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் பாஜக மாணவர்களிடம் கையெழுத்து வாங்கியது தவறு. நீட் தேர்வுக்காக திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டபோது, மாணவர்களை தவிர்த்து மற்றவர்களிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. ஏற்கனவே மிஸ்டுகால் மூலம் ஒரு கோடி பேரை சேர்த்ததாக அவர்கள் கணக்கு காட்டி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே இதை பார்க்கிறோம்”
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.